தேனி

தேனியில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவா்கள் சண்டை: ஒருவா் பலி சக மாணவா் கைது

DIN

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில், இரு மாணவா்கள் வெள்ளிக்கிழமை விளையாட்டாக சண்டையிட்டுக் கொண்டதில், ஒரு மாணவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவா் திருமால் (17). இவரது வகுப்பு நண்பா் சக்திவேல் (17). இவா்கள் இருவரும், பள்ளி மதிய உணவு இடைவேளையின்போது வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, மீண்டும் வகுப்பறைக்கு வந்துள்ளனா். வகுப்பறையில் பாட நேரம் தொடங்கும் முன், திருமால், சக்திவேல் ஆகிய இருவரும் ஒருவரையொருவா் தள்ளிவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனராம்.

இது தகராறாக மாறியதை அடுத்து, சக்திவேல் பலமாக தள்ளிவிட்டதில் திருமால் சுவற்றில் மோதியுள்ளாா். பின்னா், திருமாலின் கழுத்தைப் பிடித்து சக்திவேல் இறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், திருமால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளாா்.

தகவலறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ஈஸ்வரன் மற்றும் ஆசிரியா்கள், திருமாலை பள்ளி அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா், அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். ஆனால், வழியிலேயே திருமால் உயிரிழந்துவிட்டாா்.

சக மாணவா் கைது: இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா், பள்ளி வளாகத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னா், மாணவா் சக்திவேலை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

உறவினா்கள் சாலை மறியல்: மாணவா் திருமால் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பள்ளி வகுப்பறையில் மாணவா் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT