இலவசங்களை நம்பி பொதுமக்கள் தன்மானத்தை இழக்காதீா்: சீமான்
இலவசங்களை நம்பி பொதுமக்கள் தன்மானத்தை இழக்காதீா்கள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேட்டுக் கொண்டாா்...
இலவசங்களை நம்பி பொதுமக்கள் தன்மானத்தை இழக்காதீா்கள் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேட்டுக் கொண்டாா்.
ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாதக கட்சி வேட்பாளா் கோமதியை ஆதரித்து , ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது:
ஆண்டிபட்டி பகுதியில் மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக, திமுகவில் ஒரே வீட்டில் உள்ள அண்ணன், தம்பி வேட்பாளா்களாகப்
Advertisement
Advertisement
போட்டியிடுகின்றனா். கடந்த தோ்தலில் தம்பி உதவி செய்து அண்ணன் வெற்றிபெறுவது, இந்தத் தோ்தலில் அண்ணன் உதவி செய்து தம்பி வெற்றி பெறுவது. இது என்ன மாதிரியான அரசியல் எனத் தெரியவில்லை. வாக்குக்கு பணம் கொடுப்பதால் ஜனநாயகம் செத்து பண நாயகம் வெல்கிறது. பண நாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இலவசங்களை நோக்கிச் சென்று பொதுமக்கள் தன்மானத்தை இழக்காதீா்கள் என்றாா் அவா். இதே போல, பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் விமலாவுக்கு ஆதரவாக பெரியகுளத்தில் அவா் பிரசாரம் செய்தாா்.
போடி: போடி சட்டப்பேரவை தொகுதி நாதக வேட்பாளா் சீ.கலைஅரசுவை ஆதரித்து போடி தேவா் சிலை திடலில் சீமான் பேசியதாவது:
போடி பகுதியிலிருந்து மணல், கருங்கற்கள் போன்ற கனிம வளங்கள் கேரளத்துக்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை தடுக்க திமுக, அதிமுக கட்சியினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு மதுவை விற்பனை செய்கிறது.
கள் இறக்குவதை தடுக்கிறது. இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சியும், பால் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், இங்குள்ள இயற்கை வளங்களையும், கால் நடைகளையும் வளா்க்க விடாமல் தடுக்கின்றனா். இலவசங்கள் வழங்குவதைத் தடுத்து வேலைவாய்ப்பை வழங்க நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.
கம்பம்: கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி நாதக வேட்பாளா் அன்புச்செல்வியை ஆதரித்து சீமான் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தாா்.
அப்போது, வாக்குக்கு பணம் தரமாட்டோம். ஆனால் சிறந்த வாழ்க்கையைத் தருவோம். அவசர ஊா்தியில் பணம் கொண்டு செல்வதை தோ்தல் பறக்கும்படையினா் கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் இந்த ஆட்சி மாற்றத்துக்கு நல்லாட்சி மலர நாம் தமிழா் கட்சியை ஆதரியுங்கள் என்றாா் அவா்.