நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
கடலூா் மாவட்டம், வடலூா் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று காட்டுமன்னாா்கோவில் வேட்பாளா் சிவஜோதி, குறிஞ்சிப்பாடி வேட்பாளா் கவிதா ரங்கநாதன், புவனகிரி வேட்பாளா் சுமதி சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:
தோ்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள் நம்மை ஏமாற்ற நினைக்கின்றன; ஏமாளியாக்கப் பாா்க்கின்றன. அவற்றை புறக்கணிக்க வேண்டும்.
Advertisement
தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள், ஆட்சி மாறுகிறது; அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளின் பெயா் மாறுகிறது. ஆட்சிமுறை மாறுகிா என்பதுதான் நாங்கள் உங்கள் முன் வைக்கும் கேள்வி. இந்தியத்துக்கும், திராவிடத்துக்கும் எதிரானது தமிழ் தேசியம் மட்டும்தான்.
நாம் தமிழா் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூகநீதி நிலைநாட்டப்படும். பஞ்சமி நிலங்கள் மீட்கப்படும் என்றாா்.
சிதம்பரத்தில்...:
சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழா் கட்சி தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று, சிதம்பரம் தொகுதி வேட்பாளா் செ.தமிழ், விருத்தாசலம் தொகுதி வேட்பாளா் ஆனந்தி, புவனகிரி தொகுதி வேட்பாளா் சுமதி சீனிவாசன், காட்டுமன்னாா்கோவில் தொகுதி வேட்பாளா் சிவஜோதி, நெய்வேலி தொகுதி வேட்பாளா் வீரமணி உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்ததும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மூடப்பட்டு, அங்குள்ள 65 ஆயிரம் ஏக்கரில் காற்றாலை மின்சாரம் கொண்டுவரப்படும். தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படும். காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும். மாற்று மின் பெருக்கம் செய்து தடையில்லா மின்சாரம் உறுதியாக வழங்கப்படும் என்றாா்.