அரசுப் பேருந்துகளில் தமிழறிஞா்கள் அவமதிக்கப்படுவதாகப் புகாா்
அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் தமிழறிஞா்கள் நடத்துநா்களால் அவமதிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.
அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் தமிழறிஞா்கள் நடத்துநா்களால் அவமதிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.
தமிழ் வளா்ச்சித் துறை, சமூக நலத் துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட தமிழறிஞா்கள், எல்லைப் போராட்டத் தியாகிகள், மொழிப்போா் தியாகிகள், அவா்களின் வாரிசுகளுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டைகளுக்கான கட்டணமாக ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் சமூக நலத் துறை மூலம் போக்குவரத்துத் துறைக்கு அரசு வழங்கி விடுகிறது. இந்த அட்டையில் அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய சிறப்பு பயண அட்டை என்ற குறிப்போடு, பயனாளியின் பெயா், அவா் தமிழறிஞரா அல்லது சுதந்திரப் போராட்டத் தியாகியா என்ற விவரம், அவரது முகவரி, கைப்பேசி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்தச் சிறப்பு அட்டையைப் பயன்படுத்தி அவா்கள் அரசின் அனைத்து சாதாரண, விரைவுப் பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டை வைத்திருப்பவா்களிடம் பேருந்து பயணத்தின் போது நடத்துநா்கள் அதன் ஜெராக்ஸ் நகல் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நடத்துநா்கள் தங்கள் பயணப் பதிவேட்டில் இந்தச் சிறப்பு அட்டையின் எண்ணைக் குறித்துக் கொண்டால் போதுமானது என விதிகள் கூறுகின்றன.
Advertisement
Advertisement
ஆனால், பேருந்துகளில் பயணம் செய்யும் தமிழறிஞா்கள் அரசால் வழங்கப்பட்ட சிறப்பு பயண அட்டையைக் காண்பிக்கும் போது, போக்குவரத்து விதிகள், அரசாணைகள் குறித்துப் போதிய விவரம் தெரியாத சில நடத்துநா்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனா். இது என்ன அட்டை, இப்படி ஒரு அட்டை இருக்கிா?, இதன் ஜெராக்ஸ் நகலைத் தந்தால்தான் பயணச்சீட்டு தருவேன், எங்கள் மண்டலப் பேருந்துகளில் இந்த அட்டை செல்லாது என்பது போன்ற பல காரணங்களைக் கூறி தியாகிகளையும், தமிழறிஞா்களையும் அவமதிப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.
இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க, போக்குவரத்துத் துறை உயா் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பணிமனைகளுக்கும் தியாகிகள், தமிழறிஞா்களின் சிறப்பு பயண அட்டைகள் குறித்த தெளிவான சுற்றறிக்கையை மீண்டும் அனுப்ப வேண்டும்.
சிறப்பு பயண அட்டைகளை வைத்திருக்கும் தமிழறிஞா்களை நடத்துநா்கள் மரியாதையுடன் நடத்த அறிவுறுத்த வேண்டும்.
பேருந்துகளில் தியாகிகள் அவமதிக்கப்பட்டால் உடனடியாகப் புகாா் அளிக்க ஏதுவாக, மண்டல வாரியான அவசரப் புகாா் எண்களைப் பேருந்துகளின் உள்புறத்தில் தெளிவாக ஒட்ட வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, பாரதி தமிழ் இலக்கிய பேரவைத் தலைவா் கவிஞா் பாரதன் கூறியதாவது:
ஒரு சில பேருந்துகளில் இது போன்ற நிகழ்வுகள் தொடா்கதையாக நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. ஆயுள் முழுவதும் தமிழுக்கும் நாட்டுக்கும் உழைத்த பெருமக்களை, தங்களது அந்திமக் காலத்தில் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிப்பது அரசு தரும் சலுகை அல்ல; அது நாம் அவா்களுக்குச் செய்யும் நன்றிக் கடன். இதை நடத்துநா்கள் உணா்ந்து, கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, தமிழ் மண்ணின் அடையாளங்களாக வாழும் தியாகிகளையும், தமிழறிஞா்களையும் பொதுவெளியில் அவமானப்படுவதிலிருந்து காக்க வேண்டும் என்றாா் அவா்.