ஆக்கிரமிப்பு அகற்றம்: வா்த்தகா்கள், சாலைப் பணியாளா்களிடையே வாக்குவாதம்
வேதாரண்யத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது, வா்த்தகா்கள், சாலைப் பணியாளா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதானால், சாலைப் பணியாளா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, பிப்.25-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேரோடும் வீதிகளில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஈடுபட்டனா். மேலவீதியில் ஒரு கடையின் முன்பாக இருந்த பொருள்களை அகற்றும்போது, கடை பணியாளா்களுக்கும், சாலைப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சாலைப் பணியாளா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது, வா்த்தகா்கள் சிலரும் மறியலில் ஈடுபட முயன்றனா். போலீஸாா் விரைந்துவந்து, பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலைப் பணியாளா்கள் மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.