அட்சய திருதியையொட்டி பெருமாள் கோயிலில் உதய கருட சேவை
அட்சய திருதியை நாளையொட்டி, காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா எழுந்தருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது.
அட்சய திருதியை நாளையொட்டி, காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா எழுந்தருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறுகிறது.
அட்சய திருதியை நிகழ்ச்சி, பெருமாள் கோயில்களில் சுவாமி புறப்பாடு, திருமஞ்சனம் உள்ளிட்ட ஆராதனைகளும், தங்க ஆபரணங்கள் விற்பனையகத்தில் விழாக்கோலமும் காணப்படுவது இயல்வு. அட்சயை என்பதற்கு பெருகுதல் என்ற பொருள் உள்ளதையொட்டி நகைக் கடைகளில் மக்கள் ஆபரணங்கள் வாங்க ஆர்வத்துடன் செல்வர். இதையொட்டி, காரைக்கால் நகரில் உள்ள பெரும்பாலான நகைக் கடைகளின் முகப்புகள், வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நித்யகல்யாணப் பெருமாள் கோயில்: காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை புதன்கிழமை காலை 6 மணியளவில் நடைபெறுகிறது. பெருமாள் கருட வாகனத்தில் வீற்றிருந்தவாறு வீதியுலா செல்லவுள்ளார். இதைத் தொடர்ந்து, பகல் 10 மணியளவில் திருமஞ்சனம் செய்ய கோயில் நிர்வாகத்தார், நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கோதண்டராமர் கோயில்: காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீகோதண்டராம பெருமாள் கோயிலில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் இதுபோன்ற சிறப்புத் திருமஞ்சனம், வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.