முகப்பு
காரைக்கால்

மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை வஞ்சிக்கிறது

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதுச்சேரி மாநில மக்களை வஞ்சிக்கிறது என மாநில காங்கிரஸ் தலைவர் ஏ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Updated On : 25 டிசம்பர் 2018, 6:05 am IST
பகிர்:

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதுச்சேரி மாநில மக்களை வஞ்சிக்கிறது என மாநில காங்கிரஸ் தலைவர் ஏ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்காக கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுச்சேரி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான ஏ. நமச்சிவாயம்,  மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும், வேளாண்துறை அமைச்சருமான ஆர். கமலக்கண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சஞ்சய்தத் பேசியது: நாட்டில் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றபோதெல்லாம் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரைக் கொண்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் மத்திய அரசு இயக்கி வருகிறது. முந்தைய ஆட்சியாளர்களால் புதுச்சேரியில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் சரி செய்ய மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இங்கிருந்து ஒரு எம்.பி.யை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
ஏ. நமச்சிவாயம் பேசியது: புதுச்சேரியில் ஆளும் அரசும், காங்கிரஸ் கட்சியினரும் நாள்தோறும் மக்கள் பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும் மக்களைச் சந்தித்து, பிரச்னைகளைக் கேட்டறிந்து, எங்களால் இயன்ற அளவுக்கு அதற்குத் தீர்வு காண்கிறோம். அதேசமயம் நாங்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டதாகக் கூறவும் இல்லை. எங்களின் சிரமங்களைக் கட்சிக்காரர்களிடம்தான் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள்தான் எங்களுக்காக வாக்குகளைச் சேகரித்தீர்கள். தற்போது நாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று நம்பிதான் ஆட்சியில் அமர்ந்தோம். ஆனால், இன்று உள்ள நிலையை வெளியில் சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவர்களின் நிர்வாக குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டியிருக்கிறது. முன்பு ஆட்சியில் இருந்தவர்களால் திட்டங்களை நிறைவேற்ற முடிந்ததே, இவர்களால் ஏன்  முடியவில்லை என்று மக்கள் கருதுகிறார்கள். அப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி இருந்தது. புதுச்சேரியில் மாற்று அரசு இருந்தாலும்கூட, அந்த அரசு கேட்டதை மத்திய அரசு செய்து கொடுத்தது.
ஆனால், தற்போதைய பாஜக அரசு அதுபோல நடந்து கொள்ளவில்லை. புதுச்சேரியில் கடந்த ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட  கடனுக்கான அசலையும், வட்டியையும் கட்ட வேண்டிய நிலை  தற்போதைய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், எப்படி மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும்?அரசுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் வருவாய் உள்ளதோ அவற்றில் எல்லாம் முடக்கம் ஏற்பட்டுள்ளது.மக்களுக்கான திட்டங்களை முழுமையாக செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. எப்படிப்பட்ட சிரமம் ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை, மாணவர்களுக்கான சென்டாக் உதவித் தொகை ஆகியவற்றை  எக்காரணம் கொண்டும் நிறுத்த கூடாது என முடிவெடுத்து இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் புதுச்சேரி அரசுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் இடையூறு கொடுக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் இன்று வரைஇடையூறு செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான சவால்களையும் பிரச்னைகளையும் சந்தித்து திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். புதுச்சேரி அரசை வஞ்சிப்பதாக நினைத்து மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வு ஏற்பட மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுவையிலிருந்து அனுப்பப்பட வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது இங்கு நிலைமை மாறும், முழுமையான அளவில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
ஆர். கமலக்கண்ணன் பேசியது: காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வந்துள்ளது. ஆட்சியில் அமர்ந்தது முதல் ஓய்வின்றி மக்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த ஆட்சியின் குளறுபடிகளால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை என ஒவ்வொரு துறையிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இந்த சிக்கல்களையெல்லாம் கடந்து காரைக்காலில் புதிய குடிநீர் குழாய் பதிப்பு, விவசாயிகளுக்கான திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு மற்றும் துணை நிலை ஆளுநரால் கடுமையான சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments