காரைக்கால்

நீதிமன்ற உத்தரவுப்படி  ஜடாயுபுரீசுவரர் கோயிலுக்கு ரூ. 57 லட்சம் வழங்கியது பிப்டிக் நிர்வாகம்

DIN

நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பட்டினம் ஜடாயுபுரீசுவரர் கோயில் நிர்வாகத்துக்கு ரூ. 57 லட்சத்தை பிப்டிக் நிர்வாகம் வழங்கியது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி போலகத்தில் 600 ஏக்கர் பரப்பில் புதுச்சேரி அரசு நிறுவனமான பிப்டிக், தொழிற்பேட்டை அமைப்பதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நில ஆர்ஜிதம் செய்தது. தனியார் நிலம், கோயில்களுக்குச் சொந்தமான நிலம் என பல்வேறு தரப்பினரிடமிருந்து நிலங்களை  ஆர்ஜிதம் செய்து அதற்கான நிதியையும் வழங்கியது.
இந்த தொகை அப்போதைய சந்தை மதிப்புக்கு நிகராக இல்லாமல் வெகு குறைவாக இருந்ததாக பலர் நீதிமன்றத்தை நாடினர். இதன்படி, திருப்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயில் நிர்வாகத்தினரும் பெற்ற தொகை போதுமானதாக இல்லையென நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
காரைக்கால் மாவட்ட நீதிமன்றம், கடந்த ஓராண்டுக்கு முன்பு இக்கோயிலுக்கு பிப்டிக் நிர்வாகம் ரூ. 57 லட்சத்தை வழங்க வேண்டும்  என உத்தரவிட்டது.
உத்தரவுப் பிறப்பித்தும் நிதியளிப்பில் தாமதம் நிலவி வந்த நிலையில், தற்போது அந்த தொகையை பிப்டிக் நிர்வாகம் விடுவித்தது. இந்த தொகை விடுவிப்புக்கான ஆணையை திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், ஜடாயுபுரீசுவரர் கோயில் தனி அதிகாரி வீரசெல்வத்திடம்  புதன்கிழமை  ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில், வழக்குரைஞர் ஆர். தம்பிராஜ், கோயில் திருப்பணிக் குழுவைச் சேர்ந்த கணபதி (ஆசிரியர் ஓய்வு), கலியபெருமாள், காளிதாஸ், ராஜா, கஜேந்திரன் மற்றும் திமுக தொகுதி செயலர் என்.வி. வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோயில் நிர்வாகத்துக்கான நிதியை, புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும், இதற்கான தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி மட்டுமே கோயில் நிர்வாகத்தின் செலவுக்கு பயன்படுத்தப்படும் என கோயில் தனி அதிகாரி வீரசெல்வம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT