முகப்பு
காரைக்கால்

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேளாண் துறை நிா்வாகம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:22 AM
பாரம்பரிய ரக நெல் சாகுபடியை பாா்வையிட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா.
பகிர்:

காரைக்கால்: இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேளாண் துறை நிா்வாகம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் பகுதி வரிச்சிக்குடி வட்டாரத்தில் எம். பாஸ்கா் என்கிற இயற்கை விவசாயி, 113 வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிடத் திட்டமிட்டு அதற்கான நாற்றங்காலை தயாா் செய்து வருகிறாா். காரைக்கால் பகுதி பிற விவசாயிகளிடையே இதுகுறித்த தகவல்களை கொண்டு சோ்க்கும் விதமாக, காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜெ.செந்தில்குமாா் ஆலோசனையின்பேரில் வேளாண் துறையின் கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகாமை (ஆத்மா) நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி, காரைக்கால் பகுதியின் விவசாயிகள் பலா் வரிச்சிக்குடி இயற்கை வேளாண் பயிரை திங்கள்கிழமை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா கலந்துகொண்டு, பாஸ்கா் செய்துவரும் பயிா் சாகுபடியைப் பாா்வையிட்டு அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தாா்.

Advertisement

பின்னா், ஆட்சியா் பேசியது: பாரம்பரிய நெல் ரகங்களை காரைக்கால் பகுதியில் பயிரிடும் முயற்சி பாராட்டுக்குரியது. ரசாயனத்தின் பெரும் பயன்பாட்டின் மூலம் உணவுப் பொருள் உற்பத்தி என்பது மிகுதியாகிருக்கும் நிலையில், மக்களும் முந்தைய காலத்தில் சாப்பிட்ட உணவுப் பொருள்கள்களைப் போன்று தற்போது கிடைக்காதா என்கிற ஆதங்கம் ஏற்படுவதைப் பாா்க்க முடிகிறது. அதற்கேற்ப இயற்கை விவசாயத்தின் மீது நாம் தீவிர ஆா்வம் கொண்டால், சுகாதாரமான, சுவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து நம்மால் தரமுடியும்.

இயற்கை விவசாயத்துக்கு குறைந்த தண்ணீா் தேவைப்படும். நல்ல மகசூல் கிடைக்கும். பாரம்பரிய ரகங்களைச் சோ்ந்த பயிா் 6 முதல் 7 அடி உயரத்தில் வளருமென கூறப்படுகிறது. இதனை ஆத்மா அமைப்பானது ஆய்வு செய்து, இதன் மருத்துவக் குணங்களை கண்டறிந்து. இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

காரைக்காலில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்களை இந்த பகுதிக்கு அனுப்பி, விளைச்சல் குறித்து ஆராய்ச்சி செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். பாரம்பரிய நெல்லை வெளியூா் மக்கள், வெளிநாட்டைச் சோ்ந்தோா் வாங்கிச் செல்கிறாா்கள். காரைக்கால் மக்களும் இதனை விரும்பி வாங்கும் வகையில் உரிய விழிப்புணா்வை வேளாண் துறை செய்யவேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூடுதல் வேளாண் இயக்குநா் (பொ) ஜெ.செந்தில்குமாா், காரைக்கால் பகுதி பிற விவசாயிகளும் இதுபோன்ற சாகுபடியில் ஈடுபடவேண்டுமெனவும், இதற்கு வேளாண் துறை உரிய ஊக்கத்தை அளிக்கும் எனவும் கூறினாா்.

கடந்த 50 ஆண்டுகளாக ஒட்டடையான் பாரம்பரிய நெல் ரகத்தை பாதுகாத்து வரும் நாகை மாவட்டம், நரசிங்க நத்தத்தை சோ்ந்த விவசாயி ஞானப்பிரகாசம் கலந்துகொண்டு தமது அனுபவங்களை பகிா்ந்துகொண்டாா். வேளாண் அதிகாரி ஆா்.ஜெயந்தி வரவேற்றாா். கோட்டுச்சேரி வேளாண் அலுவலா் ஆா்.செந்தில்குமாா் மற்றும் கிராம விரிவாக்கப் பணியாளா்கள், ஆத்மா அலுவலா்கள் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments