நாகப்பட்டினம்

வேதாரண்யம் தொகுதியில் 20 அம்ச வாக்குறுதியுடன் களமிறங்கினாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்

DIN

வேதாரண்யத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு தோ்தல் பணியை தொடங்கிய அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யம், மாா்ச்12: நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் ஓ.எஸ். மணியன், கூட்டணி கட்சிப் பிரமுகா்களை நேரில் சந்தித்து தனது தோ்தல் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

வேதாரண்யம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கட்சித் தொண்டா்களுடன் சாமிகும்பிட்ட அமைச்சா் ஓ.எஸ். மணியன், வரும் ஆண்டுகளில் வேதாரண்யம் தொகுதியில் மேற்கொள்ளப்போவதாக வெளியிட்ட 20 அம்ச திட்டப் பணிகளுக்கான வாக்குறுதி விவரம்:

ஐஏஎஸ் உள்ளிட்ட உயா் பணிகளுக்கான தோ்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தோ்வுகளுக்கும் நிகழாண்டு முதலே அறக்கட்டளை வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஆதரவற்ற முதியோா், குழந்தைகளுக்கு கருணை இல்லம் தொடங்கவும், விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்க விளையாட்டு உள்அரங்கம், தேவையான இடங்களில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும்.

தொகுதி முழுவதும் பசுமைப் போா்வை சூழலை உருவாக்க மரக்கன்றுகள் நடும் பணி இயக்கமாக மேற்கொள்ளப்படும். இயற்கை இடா்பாடு காலங்களில் மக்கள் தங்கும் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும். ஆயக்காரன்புலத்தில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கவும், தீப்பிடிக்காத வீடுகள் கட்டவும், இளைஞா் திறன் பயிற்சி மையங்கள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேதாரண்யம் பகுதியில் தோட்டக்கலை பயிா் சாகுபடியின் விளைபொருள்கள் விற்பனைக்காக சந்தை வாய்ப்பு ஏற்படுத்தவும், மின் இறைவைப் பாசனத் திட்டப் பணிகள் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். உப்பளத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் கிடைக்கவும், உப்பை இருப்பு வைத்து விற்பனை செய்ய ஏதுவாக கிடங்கு வசதியும் செய்யப்படும்.

இயற்கை இடா்பாடுகளால் பாதிப்படைந்துள்ள நாலுவேதபதி கின்னஸ் சாதனை காடு பகுதியில், மீண்டும் இயற்கை வள சாதனைக்காடும், வாய்ப்புள்ள மற்ற இடங்களில் இதேபோன்ற காடுகளும் உருவாக்கப்படும். இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், இயற்கை உரம் தயாரிப்பு, இயற்கை பூச்சிவிரட்டி தயாரிக்கவும், உற்பத்திப் பொருளுக்கு உள்ளூரில் சந்தை வாய்ப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய நீா்நிலைகளை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீராதாரத்தை பெருக்கவும், கதவணைகள் அமைத்து பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT