FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை

கீழ்வேளூா் ஒன்றியத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற முறைகேடு தொடா்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

2 அக்டோபர் 2024, 4:07 am IST
கீழ்வேளூா் ஒன்றியம், ஆதமங்கலம் ஊராட்சியில் பிரதமா் வீடு கட்டும் திட்ட பயனாளிகளிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா்.
பகிர்:

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஒன்றியத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற முறைகேடு தொடா்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கடந்த 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவா்கள் இல்லாதபோது, தனி அலுவலா்கள் மற்றும் ஊராட்சி செயலா்கள் மேற்பாா்வையில் ஊராட்சி நிா்வாகம் செயல்பட்டுவந்தது. இந்த காலகட்டத்தில் கீழ்வேளூா் ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, அந்த ஊராட்சிகளில் அப்போது பணியிலிருந்த அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில், ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூா், கோவில்கண்ணாப்பூா், தெற்குபனையூா், வலிவலம் ஆகிய 6 ஊராட்சிகளில் சுமாா் 146 வீடுகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஆதமங்கலம் ஊராட்சியில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பால ரவிக்குமாா் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளா் அருள்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்கள் பெயரில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதா? அவா்கள்தான் அந்த வீடுகளில் வசிக்கின்றனரா என விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் ‘தற்போது ஆதமங்கலம் ஊராட்சியில் ஆய்வு செய்து வருகிறோம். மற்ற 5 ஊராட்சிகளில் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொள்ளப்படும். முறைகேடாக எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பது விசாரணை முடிவில் தெரியவரும்’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments