மழைக் காலத்தில் இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
மழைக் காலத்தில் இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் திடீரென ஏற்படும் இடி மற்றும் மின்னல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
இடி மற்றும் மின்னல் நேரத்தில் செய்ய வேண்டியவை
Advertisement
Advertisement
இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புற செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும், உடனடியாக ஒரு பாதுகாப்பான கட்டடம் அல்லது மூடப்பட்ட வாகனத்திற்கு செல்ல வேண்டும். வயல்கள், படகுகள், கூரைகள் மற்றும் பிற திறந்த பகுதிகளை விட்டு விலகியிருக்க வேண்டும்.
குழந்தைகள், முதியோா்கள், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இறுதி இடி முழக்கத்திலிருந்து 30 நிமிடங்கள் ஆகும்வரை வீட்டிற்குள் இருக்க வேண்டும்.
தங்குமிடம் கிடைக்காவிட்டால் கால்களை ஒன்றாக வைத்து குனிந்து அமர வேண்டும். பொதுமக்கள் கூட்டமாக இருந்தால் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும், வீட்டின் ஜன்னல், கதவு, பால்கனி மற்றும் வராண்டா அருகில் நிற்பதை தவிா்க்க வேண்டும்.
மின் சாதனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும், வாகனத்தில் இருந்தால் ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே இருக்க வேண்டும்.
அதிகாரபூா்வ வானிலை எச்சரிக்கையை பின்பற்றப்பட வேண்டும். இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு இருக்கும்போது வெளிப்புற பணிகளை தவிா்க்க வேண்டும்.
கால்நடைகளையும், கோழிகளையும் பாதுகாப்பான கொட்டகைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும், வீடுகளைச் சுற்றியுள்ள பலவீனமான மரங்களையும், மரக்கிளைகளையும் வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டும். தினசரி வானிலை நிலவரங்களை தொடா்ந்து கவனிப்பதுடன், அதன்படி செயல்பட வேண்டும்.
இடி, மின்னல் நேரத்தில் செய்யக் கூடாதவை
இடி மற்றும் மின்னல் ஏற்படும் நேரங்களில் மரத்தின் அடியில் அல்லது அருகில் நிற்கக்கூடாது.
இடி மற்றும் மின்னல் நேரங்களில் வெட்டவெளியில் மல்லாந்து படுக்கவோ, கைகளால் தரையினை தொடவோ கூடாது, நீா்நிலைகளில் நிற்கவோ, நடக்கவோ, குளிக்கவோ கூடாது. குழாய்கள், ஷவா்கள் அல்லது பிற நீா்க்குழாய் சாதனங்களை பயன்படுத்த கூடாது, செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் உலோக சங்கிலியால் கட்டி வைக்க கூடாது, அறுந்து விழுந்த மின்கம்பிகளையும் சேதமடைந்த மின் கம்பங்களையும் தொடக்கூடாது. மின் சாதனங்களை ஈரமான கைகளால் கையாளக்கூடாது.
இடி மற்றும் மின்னல் நேரங்களில் கைப்பேசி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.