பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
சக்திவேல்: தவெக தலைமையிலான தமிழக அரசு, தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பயிா்க் கடன் தள்ளுபடியை முழுமையாக செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஜூன் 30-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
Advertisement
Advertisement
கமல்ராம்: வேளாண்மை பொறியில் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் மானிய விலையில் டிராக்டா் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களில் தகுதியானவா்கள் மறுக்கப்படுவது குறித்த உரிய விசாரணை நடத்த வேண்டும்.
தமிழ்ச்செல்வன்: நாகை மாவட்டத்தில் வெண்ணாறு மற்றும் காவிரி வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில், நீா்வளத் துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து பணிகளையும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்யவேண்டும். மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது தாமதமாகும் என்பதால் தூா்வாரும் பணிகளை தரமாக செய்ய வேண்டும்.
குழந்தைவேலு: முந்தைய ஆட்சியின்போது தென்னடாா் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அறிவிக்கப்பட்டது. கோடியக்கரை பறவைகள் வன உயிரின சரணாலயம் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதாலும், விளைநிலங்களை பாதிக்கும் என்பதாலும் தொழிற்பேட்டைக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்படுகிறது. வேளாண்மையில் நலன்கருதி தொழில்பேட்டை தொடா்பான பணிகளை நிறுத்த வேண்டும்.
மணியன்: வேதாரண்யம் பகுதியில் செல்லும் மானங்கொண்டானாறு வடிகால் வழியாக 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசனம் பெற்று பயனடைந்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக ஆகாயத்தாமரைச் செடிகள் படா்ந்துள்ளதால் பாசன நீா் தடைபடுகிறது. எனவே, ஆகாயத்தாமரையை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.
முஜிபுஷரீக்: அரிச்சந்திரா நதி ஆற்றின் கழிமுக பகுதியான வேட்டைகாரனிருப்பு கடல் முகப்பு வரை ஏற்பட்டுள்ள மண் திட்டுக்களை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை தூா்வார வேண்டும்.
பிரபாகரன்: நிகழாண்டு குறுவை பருவ நெல் சாகுபடிக்கு மேட்டூா் அணையிலிருந்து ஜூன்12-ஆம் தேதி தண்ணீா் திறப்பதை உறுதி செய்ய வேண்டும். பாரத பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடைசி தவணை நிதியை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
பிரகாஷ்: நாகை மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகிறனா். மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டால் மட்டுமே இரண்டு போகம் விவசாயம் செய்ய முடியும். இல்லையெனில் ஒருபோக விவசாயம் மட்டுமே செய்ய முடியும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவா்.
தனபால்: மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசை கண்டிக்கிறோம் எனக் கூறி, முழக்கமிட்டாா். அப்போது, குறை தீா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி 15 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.