"உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள்'
உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் என திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் என திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
திருவாரூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
ஆசிரியர் பணி என்பது உயர்வானது. ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள். களிமண்ணை மெல்ல உருமாற்றி, அதற்கு உருவம் கொடுத்து சிறப்பாக மாற்றும் பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வெளியேற காரணம் ஆசிரியர்களே. பணிக்காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் கோ. தனமணி பேசியது: மாணவர்களை நல்ல முறையில் வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், இனி வரும் காலங்களை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அம்மையப்பன், பொதக்குடி, பனங்குடி, திருநெய்ப்பேர், மன்னார்குடி, கொடிக்கால்பாளையம், எடமேலையூர், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், எடையூர், பெருகவாழ்ந்தான், ஆலங்குடி, இடும்பாவனம், கருவாக்குறிச்சி ஆகிய 14 இடங்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்டத் தலைவர் டி.எஸ்.ஆர். கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர். விஜயா, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் அ. சீனிவாசன், மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (அனைவருக்கும் கல்வி) ஆர். சங்கரநாராயணன், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் இடைநிலைக்கல்வி) கே. கலைவாணன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெ. திருமாறன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்டச் செயலர் எம்.எஸ். பாலு மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.