விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்: இன்று முதல் கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்
விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் குறித்த சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில்
விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் குறித்த சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும், ஜூன் 21 முதல் 23- ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்படி, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நிதி உதவியானது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து 30.6.2019 தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் பிரதம மந்தரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இத்திட்டம், தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இத்திட்டத்தில் தகுதி பெறாத விவசாயிகள் தற்போது தகுதி பெற்றிருந்தால் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இதற்கு முன்னர் வேளாண் கணக்கெடுப்பு பதிவேட்டில் இடம்பெறாத தகுதி வாய்ந்த விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். விடுபட்ட விவசாயிகள், ஜூன் 24- ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்தால் தான் முதல் தவணைத் தொகை ரு.2000 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கென சிறப்பு முகாம் ஜூன் 21 முதல் 23 வரை அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமின் போது அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் இணைந்து விண்ணப்பங்களைச் சேகரிக்க உள்ளனர். எனவே, அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.