முகப்பு
புதுதில்லி

"மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் எந்தக் குற்றமும் நடக்கவில்லை'

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்புடைய வழக்கில் எவ்விதக்

Updated On : 14 பிப்ரவரி 2019, 1:21 am IST
பகிர்:

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்புடைய வழக்கில் எவ்விதக் குற்றமும் நடக்கவில்லை எனவும், ஆதாரங்களை சிபிஐ திட்டமிட்டே மறைத்துள்ளது என்றும் ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி தரப்பில் வாதிடப்பட்டது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்த போது, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி, உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த, விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக அவர் மீதும், மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், கல்லூரி நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்டோர் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்தது.
இதனிடையே, தன் மீதான இரு வழக்குகளையும் ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எஸ்.மேத்தா அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஐ.எஸ். மேத்தா அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரியின் தலைவர் கேசவ் அகர்வால் சார்பில் மூத்த வழக்குரைஞர் விகாஸ் பாவா ஆஜராகி முன்வைத்த வாதம்:
இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய சுகாதாரத் துறை ஆகிய இரு அதிகார மையங்கள் ஆடும் ஆட்டத்தில் தனியார் கல்லூரிகள் சிக்கியுள்ளன. இது தொடர்பாக அப்போதைய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், கடந்த 2008, அக்டோபர் 24-இல் மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், "இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் சிறப்புக் குழு ஆய்வு நடத்தியதையும், கல்லூரியில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதையும் சிறப்புக் குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதி சரி என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தக் கடித ஆவணத்தை சிபிஐ திட்டமிட்டே தாக்கல் செய்யவில்லை. கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதி விவகாரத்தில் எதுவும் செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தும், சிபிஐ கேட்கவில்லை. எனவே, இந்த வழக்கில் எவ்விதக் குற்றமும் நடைபெறவில்லை' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஐ.எஸ். மேத்தா, இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்களை தனியார் கல்லூரிகள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை மார்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.