ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு ரூ.8 லட்சம் கொள்ளை
தில்லியில் ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தில்லியில் ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக தில்லி காவல் துறையினர் தெரிவித்தாவது: தெற்கு தில்லியில் உள்ள பிகாஜி காமா பிளேஸ் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு செவ்வாய்க்கிழமை வாடிக்கையாளர்கள் சிலர் பணம் எடுக்கச் சென்றனர். அப்போது, பணம் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தின் கீழ் பகுதியில் துளையிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அந்தப் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. அந்த ஏடிஎம் மையத்தில் முழு நேரப் பணியில் பாதுகாவலர் இல்லை என்பதும் தெரிய வந்தது. ஏடிஎம் மையப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.
அதில், அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்ததும், அந்த மையத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், கேஸ் கட்டர் இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தின் கீழ் பகுதியிலிருந்து துளையிட்டு உள்ளே பெட்டியில் இருந்து சுமார் ரூ. 7.80 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றதும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஆர்.கே. புரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளும், பணத்தை கையாளும் நிறுவனமும் விசாரணைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.