முகப்பு
புதுதில்லி

கொட்டித் தீர்த்த மழையால் குறைந்தது காற்று மாசு!

தில்லியில் இரவிலும், பகலிலும் கொட்டித் தீர்த்த மழையால், நீடித்து வந்த காற்று மாசின் தாக்கம் மிதமான நிலைக்கு கீழிறங்கியது. 

Updated On : 23 ஜனவரி 2019, 6:12 am IST
பகிர்:

தில்லியில் இரவிலும், பகலிலும் கொட்டித் தீர்த்த மழையால், நீடித்து வந்த காற்று மாசின் தாக்கம் மிதமான நிலைக்கு கீழிறங்கியது. 
தில்லியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புவரை காற்று மாசுவால் காற்றின் ஒட்டுமொத்தத் தரக் குறியீடு தொடர்ந்து கடுமையான பிரிவிலேயே நீடித்து வந்தது. 
சில நாள்களாகவே தில்லியில் குளிர்ந்த காற்று, பனிமூட்டமும் இருந்தது. இந்நிலையில், தில்லியில் சில ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை நிகழ் குளிர் கால ஜனவரியில் 28.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
இந்நிலையில், நீடித்து வரும் காற்று மாசு அடுத்த சில தினங்களில் பெய்யும் மழையால் குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, திங்கள்கிழமை தில்லியில் பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. 
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையிலும் அவ்வப்போது மழை விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது. பலத்த காற்றும் வீசியது. இதனால், செவ்வாய்க்கிழமை வெப்ப நிலை வெகுவாகக் குறைந்தது. 
இந்த நிலையில் இந்தப் பருவத்தில் முதல் முறையாக காற்றின் தரம் மிகவும் மோசம் மற்றும் கடுமை ஆகிய பிரிவுகளில் இருந்து மிதமான பிரிவுக்கு கீழிறங்கியது. பலத்த காற்றின் காரணமாக காற்றிலுள்ள மாசுபடுத்திகள் பரவியதால் மாசு அளவு குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாக இருந்தது. 
ஆனந்த் விஹார், ஐடிஓ, ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம், துவாரகா செக்டார் 8, அசோக் விஹார், ஜாஹங்கீர்புரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தகவலின்படி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் 133 என பதிவாகியிருந்தது. 
செவ்வாய்க்கிழமை இரு இடங்களில் காற்றின் தரம் திருப்திகரமான பிரிவிலும், 32 இடங்களில் மிதமான பிரிவிலும் இருந்தது. அதேபோன்று, பி.எம். 2.5 நுண்துகள் மாசு 61 ஆகவும், பி.எம். 10 நுண்துகள் மாசு 110 ஆகவும் பதிவாகியிருந்தது.

ரயில்கள் தாமதம்
மழையின் காரணமாக தில்லியில் இருந்து புறப்படும் மற்றும்தில்லி வந்து செல்லும் சில ரயில்களின் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. 

மழைப் பதிவு
தில்லி சஃப்தர்ஜங் பகுதியில் காலை 8.30 மணியளவில் 14.8 மி.மீ., பாலத்தில் 22.8 மி.மீ., லோதி ரோட்டில் 15 மி.மீ., ஆயா நகரில் 26.1 மி.மீ. மழை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார். 
குறைந்தபட்ச வெப்பநிலை 12.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. மணிக்கு 4.6 கிலோமீட்டர் வேகத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

Advertisement

Advertisement

போக்குவரத்து பாதிப்பு
மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் தொடர்பான விவரங்களை தில்லி போக்குவரத்து காவல் துறையினர் அதன் சுட்டுரைப் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டனர். லோதி ரோடு அருகே பேருந்து மழைநீரில் சிக்கிக்கொண்டதால், டிஃபன்ஸ் காலனி மேம்பாலம், பாராபுல்லா மேம்பாலம், லாலா லஜபதி ராய் சாலை ஆகியவற்றை தவிர்க்குமாறு போலீஸார் சுட்டுரையில் கேட்டுக்கொண்டனர்.
ராணி ஜான்சி ரோடு, ஆசாத் மார்க்கெட், ஈத்கா மற்றும் ரபி மார்க், கைபர் பாஸ், கேலா காட் ஜிபிஓ, சத்தா ரயில், திகம்பர் ஜெயின் கோவில், அசோக் விஹார் மேம்பாலம், அரவிந்தர் மார்க் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கேரளா சௌக், மால்வியா நகர், மோதி மில் மேம்பாலம், ஆசாத் மார்க்கெட் சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளில் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாராயணா மேம்பாலம், லாஜ்பத் நகர் நோக்கி செல்லும் டிஃப்பன்ஸ் காலனி சுரங்கப்பதை ஆகிய இடங்களிலும் மழைநீர் சூழ்ந்தது. மூல்சந்த் சுரங்கப்பாதை, பிகார் காலனி, சத்திரசால் ஸ்டேடியம் பிரதான வாயில் சிவப்பு விளக்கு, ஐபி எஸ்டேட், சமல்கா சிவப்பு விளக்கு, ஆர்டிஆர் டி-பாயின்ட், பைரோன் சிங் மார்க் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல நேர்ந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.