முகப்பு
புதுதில்லி

ரூ.80 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தில்லி, அண்டை மாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் போதைப்பொருளை விநியோகித்து வந்த இரண்டு

Updated On : 23 ஜனவரி 2019, 6:08 am IST
பகிர்:

தில்லி, அண்டை மாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் போதைப்பொருளை விநியோகித்து வந்த இரண்டு கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.80 கோடி மதிப்புள்ள 20 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
இது குறித்து தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவின் துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், தில்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள்களை விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதில் ஒரு கும்பல் தில்லியிலிருந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இதில் தொடர்புடைய சஜீத் (32), ஷகீர் (27) ஆகிய இருவர் ரிதாலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடமும், டிரக்கிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 15 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தீவிர விசாரண மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கடந்த 4-5 ஆண்டுகளாக போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், பரேய்லியைச் சேர்ந்த ரஷீத் என்பவரின் வேண்டுகோளின்படி இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். 
இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் மெளசாம் அலி (30), சோட்டா கான் (55), சஞ்சய் (36) ஆகிய மூவர் நிரன்காரி சரோவர் அருகே கைது செய்யப்பட்டனர். அவர்கள் தில்லியில் உள்ள அவர்களது கூட்டாளிக்கு ஹெராயின் போதைப்பொருளை விநியோகிப்பதற்காக ஒரு காரில் வந்த போது சிக்கினர். சோதனையின் போது, காரினுள் ஸ்பீடோ மீட்டருக்கு அருகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 2 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவர்களுக்கு போதைப் பொருளை பிரதானமாக விநியோகித்து வந்த ஜலீல் கான் (55), பரேய்லியில் கைது செய்யப்பட்டார்.
மெளசாம், சோட்டா, சஞ்சய் ஆகிய மூவரும் பரேய்லியில் வசித்து வரும் ஜலீல் மற்றும் முஸ்டிகாம் ஆகிய இருவருடமும் போதைப்பொருளைப் பெற்று உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் தேசியத் தலைநகர் வலைய (என்சிஆர்) பகுதிகளில் விநியோகித்து வந்தது விசாசரணையில் தெரிய வந்தது. ஜலீலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ஹெராயினுக்குரிய இடுபொருள்களை ராபரேய்லிலிருந்து அவர் பெற்று வந்தாகவும், அதைக் கொண்டு மறைவான இடத்தில் ஹெராயின் போதைப் பொருள் தயாரித்து வந்ததாகவும் தெரிய வந்தது என்றார் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.