3-ஆவது மாடியிலிருந்து விழுந்து பெண் சாவு: மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்
மத்திய தில்லியில் உள்ள பிரசாத் நகரில் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த 20 வயது இளம் பெண் உயிரிழந்தார்.
மத்திய தில்லியில் உள்ள பிரசாத் நகரில் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த 20 வயது இளம் பெண் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: அந்தப் பெண் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற உண்மை தெரிய வரும். அந்தப் பெண், தந்தையின் இரண்டாவது மனைவியுடன் நரேலா பகுதியில் ராணிகெடாவில் வசித்து வந்தார்.
கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கனாட் பிளேஸில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் காலை நிகழ்வில் பங்கேற்றுள்ளார். ஆனால், பிற்பகல் நடைபெற்ற நிகழ்வுக்கு அவர் வரவில்லை. இதையடுத்து, அவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அடுத்த நாள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே இளம் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக பிரசாத் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண்ணை மீட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார்.
அந்தப் பெண்ணுக்கு ஆண் நண்பர் ஒருவர் உள்ளார். அவரது உறவினர் வீடு பிரசாத் நகரில் உள்ளது. ஜனவரி 16-ஆம் தேதி மாலையில் அவருடன், உறவினர் வீட்டுக்கு அந்தப் பெண் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பிரசாத் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.