புதுதில்லி

தில்லியில் ஆண்டு இறுதிக்குள் வனவிலங்குகள் மீட்பு மையம்!

DIN

புது தில்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் தில்லி தனது முதல் வன விலங்குகள் மீட்பு மையத்தைப் பெற வாய்ப்புள்ளது என்று வனம் மற்றும் வனவிலங்குகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அந்த அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தேசியத் தலைநகரில் அரசு சாா்பிலோ தனியாா் சாா்பிலோ இதுபோன்ற வசதி இல்லை. பல்வேறு இடங்களில், வனப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அல்லது காயமடைந்த விலங்குகளை வனத் துறையினா் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மீட்டு தில்லியில் உள்ள அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயத்தில் புனா்வாழ்வு அளித்து வருகின்றனா். தில்லி ராஜோக்ரியில் 1.24 ஏக்கா் நிலப்பரப்பில் ஒரு குரங்கு மீட்பு மையம் கைவிடப்பட்ட நிலையில், இந்த வனவிலங்குகள் மீட்பு மைய வசதி அமைய உள்ளது. பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் விலங்குகளை மீட்பதற்கும், அவற்றை ராஜோக்ரி சரணாலயத்தில் புனா் வாழ்வு அளிப்பதற்கும் தலா ஐந்து உறுப்பினா்களைக் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. ஒரு மாதத்தில் இந்தக் குழுக்கள் அமைக்கப்படும், அதே நேரத்தில் ஆண்டு இறுதிக்குள் இந்த வசதி தயாராகிவிடும்.

இழப்பீட்டு காடு வளா்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் இந்த நோக்கங்களுக்காக நிதியை அனுமதித்துள்ளது. பறவைகள் மீட்பு உத்தேச வசதிக்குப் பதிலாக இந்த விலங்குகள் மீட்பு மையம் அமைக்கப்டவுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த மத்திய அதிகாரமளித்த குழுவின் முன் பறவைகள் மீட்பு மையத்திற்கான திட்டம் நிலுவையில் உள்ளது. புறாக்கள் மற்றும் சில பறவைகளுக்காக இந்த வசதி தேவையில்லை என குழு கருதியது. இதனால் பறவைகள் மீட்பு மையம் திட்டம் கைவிட்டப்பட்டுள்ளது. எந்தவித பெரிய பாதுகாப்பு மதிப்பு இல்லாத பறவைகளுக்காக அரசு வளங்களை ஒதுக்குவதில் குழுவுக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும், பறவைகள் மீட்பு மையத்தின் தேவையை நியாயப்படுத்தும் தரவுகளை வழங்குமாறு வனத்துறையிடம் இக்குழு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், மீட்கப்பட்ட விலங்குகளின் தரவுகளை ஆராய்ந்தோம். அப்போது, ​ பறவைகளுக்காக மட்டும் இதுபோன்ற மீட்பு மைய தனி வசதியை ஏற்படுத்துவதை நியாயப்படுத்தும் வகையில் தரவுகள் அமையவில்லை என்பதை அறிந்தோம். பறவைகள் மீட்பு மையத்தின் முன்மொழிவை வனவிலங்குகள் மீட்பு மையத்திற்கு விரிவுபடுத்த ரிட்ஜ் மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் தேவைப்பட்டது. ரிட்ஜ் மேலாண்மை வாரியம் என்பது 1995-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட உயா் சக்தி வாய்ந்த அமைப்பாகும்.

உத்தேசிக்கப்பட்டு வனவிலங்குகள் மீட்பு மையம், பறவைகளுக்கும் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும். இது குறித்து கடந்த ஜனவரியில் ரிட்ஜ் மேலாண்மை வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்தது. ஆனால், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாா்ச்சில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் இத்திட்டம் தாமதமானது.

இந்நிலையில், இத்திட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ரிட்ஜ் மேலாண்மை வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். வாரியத்தின் ஒப்புதல் கிடைத்ததும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரமளித்த குழுவை போதுமான ஆதாரத் தரவுகளுடன் அணுகுவோம். வாரியத்தின் நிலத்தை வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும். இதற்கு மத்திய அதிகாரம் அளித்த குழுவின் மூலம் உரிய முறையில் அணுகுவோம். வனம் மற்றும் விலங்குகள் தொடா்பான புகாா்களைத் தீா்க்க வனம் மற்றும் வன விலங்குகள் துறை சமீபத்தில் 1800118600 என்ற ஒருங்கிணைந்த உதவி எண்ணை (ஹெல்ப்லைன்) தொடங்கியயுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT