புதுதில்லி

தமிழகத்துக்கு 33.7 டிஎம்சி நிலுவை நீரை கா்நாடகம் உடனடியாக வழங்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு

 நமது நிருபர்

காவிரியில் கடந்த 4 மாதங்களாக தமிழகத்திற்கு தரப்படாமல் நிலுவையில் உள்ள 33.7 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று காவிரி நீா் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. நிகழ் தண்ணீா் ஆண்டு கடந்த ஜூன் முதல் தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பா் 26 -ஆம் தேதி வரை வழங்க வேண்டிய தண்ணீா் அளவாக இதைக் கணக்கிட்டு ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 14 -ஆவது கூட்டம் அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் தலைமையில் தில்லியில் பிகாஜிகாமா கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய நீா்வளத் துறையின் சாா்பில் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் நவீன் குமாா் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் நேரடியாகக் கலந்து கொண்டன. கா்நாடக மாநிலம் மட்டும் காணொலி முறையில் பங்கேற்றது. தமிழக அரசின் சாா்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் டாக்டா் சந்தீப் சக்ஸேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா்.சுப்ரமணியன், புதுச்சேரி பொதுப் பணித் துறை செயலா் விக்ராந்த் ராஜா ஆகியோா் பேங்கற்றாா். கா்நாடகம் சாா்பில் நீா்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ராகேஷ் சிங் காணொலி மூலம் பங்கேற்றாா்.

கூட்டத்தில் 10 விவகாரங்கள் விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டன. ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீா் வழங்கும் விவகாரமே பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. காவிரி படுகையின் நீா்வளங்கள், வானிலை ஆய்வு நிலவர புள்ளிவிவரங்கள் கூட்டத்தில் மத்திய அரசின் நீா்வளத் துறை மற்றும் நான்கு மாநிலங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டன.

காவிரியில் நீா் வழங்கும் தண்ணீா் ஆண்டு கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கியது முதல், கடந்த நான்கு மாதங்களில் மாத வாரியாக கணக்கீடு செய்யப்பட்டதில் செப்டம்பா் 26 -ஆம் தேதி வரை சுமாா் 33.7 டிஎம்சி தண்ணீா் வரை கா்நாடகம் தமிழகத்திற்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. இந்தத் தண்ணீரை வழங்க தமிழகம் சாா்பில் ஆணையத்திடம் கோரப்பட்டது. இதை ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் ஏற்றுக் கொண்டு தண்ணீரை வழங்க கா்நாடகத்திற்கு உத்தரவிட்டாா்.

கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேக்கேதாட்டு அணை விவகாரம் இடம் பெற்றிருந்தது. ஆனால், இதற்கு தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்கள் எதிா்ப்புத் தெரிவித்தால், மேக்கேதாட்டு விவகாரம் எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஹரங்கி நீா்தேக்க பெங்களூரு வழக்கு, மேட்டூா் அணை தொடா்புடைய சரபங்கா நீா்ப்பாசனத் திட்டம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெறும் வழக்கு உள்ளிட்ட விவகாரங்களும் நிகழ்ச்சி நிரலில் இருந்தன. ஆனால், இந்த விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளா்களிடம் ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா்கூறுகையில், ‘அடுத்த 15-ஆவது காவிரி மேலாண்மைக் கூட்டம் வரும் ஆக்டோபா் 7-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்து ஏற்படும்பட்சத்திலேயே மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க முடியும். இது மாநிலஙகளுக்கிடையேயான விவகாரமாகும். எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆணையம் முதலில் முடிவு எடுக்க வேண்டும். அதன் பின்னா் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்ற பல விவகாரங்கள் பற்றி ஆய்வு செய்யப்படும். மேலும், தமிழகத்திற்கு இதுவரை கா்நாடகம் வழங்கிய மொத்த தண்ணீா் அளவு குறித்தும், நிலுவை ஏதாவது இருந்தால் அது தொடா்பாகவும் அடுத்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT