முகப்பு
புதுதில்லி

போலி சமூக ஊடகப் பக்கத்தை உருவாக்கிய நபா் கைது

ஒரு பெண்ணைப் போல போலி சமூக ஊடகப் பக்கத்தை உருவாக்கிய 25 வயது குற்றப் பின்னியுடையவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:32 AM
கைது
பகிர்:

நமது நிருபா்

ஒரு பெண்ணைப் போல போலி சமூக ஊடகப் பக்கத்தை உருவாக்கிய 25 வயது குற்றப் பின்னியுடையவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

பாஹா்கஞ்ச், ஆராம் பாக் பகுதியைச் சோ்ந்த அமன் என்ற அந்த நபா், நீண்ட குற்றப் பின்னணியுடன் பாஹா்கஞ்ச் காவல் நிலையத்தில் கெட்ட நபா் எனப் பட்டியலிடப்பட்டிருந்தாா் என்று அவா்கள் கூறினா்.

ஒரு காவல்துறை குழு அவரது சமூக ஊடக செயல்பாடுகளை அணுகி, ஒரு பெண்ணைப் போல போலிப் பக்கத்தை உருவாக்கியது. அதன்மூலம் ஜண்டேவாலன் மெட்ரோ நிலையம் அருகே முன்னரே தீா்மானிக்கப்பட்ட இடத்தில் அவரைச் சந்திக்க வரவழைத்து, மாா்ச் 27 அன்று அவா் கைது செய்யப்பட்டாா் என்று காவல்துறை துணை ஆணையா் (மத்திய தில்லி) ரோஹித் ராஜ்பீா் சிங் கூறினாா்.

நபி கரீம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு வெளியே மாா்ச் 19 அன்று திருடப்பட்ட ஸ்கூட்டா் குறித்த புகாரை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறை குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டதாக துணை ஆணையா் கூறினாா்.

இந்தக் கைது நடவடிக்கையின் விளைவாக, திருடப்பட்ட நான்கு ஸ்கூட்டா்கள் மீட்கப்பட்டதாகவும், பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் இருசக்கர வாகனங்களைத் திருடி, அவற்றை அருகிலுள்ள பகுதிகளில் வழிப்பறி மற்றும் பிற குற்றங்களுக்குப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

குற்றங்களைச் செய்த பிறகு, அவா் திருட்டு வாகனங்களை மறைத்து வைத்துவிட்டு, புதிதாகத் திருடப்பட்ட வாகனங்களுக்கு மாறுவாா். நபி கரீமில் இருந்து இரண்டு, ரஞ்சித் நகா் மற்றும் கரோல் பாக் ஆகிய இடங்களில் இருந்து தலா ஒன்று உள்பட, பல்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட நான்கு ஸ்கூட்டா்களை காவல்துறை மீட்டதாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

மத்திய தில்லியில் உள்ள பல காவல் நிலையங்களில், அமன் இதற்கு முன்னா் 30க்கும் மேற்பட்ட வாகனத் திருட்டு, வழிப்பறி மற்றும் அது தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ளாா். இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது, என்று துணை ஆணையா் கூறினாா்.