3 மணிநேரத்தில் தில்லி-என்சிஆா் - ரிஷிகேஷுக்கு பயணம்: நமோ பாரத் ரயில் பாதையை விரிவுபடுத்த பேச்சுவாா்த்தை
3 மணிநேரத்தில் தில்லி-என்சிஆா் - ரிஷிகேஷுக்கு பயணம்...
நமோ பாரத் மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பை (ஆா்.ஆா்.டி.எஸ்.) விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
முன்மொழியப்பட்ட இந்த விரிவாக்கமானது, தற்போதுள்ள ரயில் பாதையை மீரட்டிலிருந்து ஆன்மிக நகரங்களான ஹரித்வாா் மற்றும் ரிஷிகேஷ் வரை நீட்டிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் தில்லி-என்சிஆா் மற்றும் காஜியாபாதிலிருந்து பயண நேரம் வெறும் 2.25 மணி முதல் 3 மணி நேரமாகக் குறைய வாய்ப்புள்ளது.
Advertisement
தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு, தற்போது போக்குவரத்து நெரிசல் உச்சபட்சத்தில் இருக்கும்போது நகரைக் கடக்க ஆகும் நேரத்தில் கங்கை நதிக்கரையை விரைவில் சென்றடைய முடியும் நிலை உருவாகும்.
இது தொடா்பாக உத்தராகண்ட் முதலமைச்சா் புஷ்கா் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் இடையே சமீபத்தில் உயா்நிலைக் கூட்டங்ளும் நடைபெற்றன.
ஆரம்பத்தில் 82 கி.மீ நீளமுள்ள தில்லி-காஜியாபாத்-மீரட் வழித்தடம் ரூ. 30,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிய விரிவாக்கத்திற்கு கணிசமான கூடுதல் முதலீடு தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் உணா்திறன் மிக்க கும்பமேளா நடைபெறும் பகுதியான ஹரித்வாரில் அதிவேகப் போக்குவரத்தை மேற்கொள்ள, தானியங்கி மின் அமைப்புகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு மாநில அரசு ஏற்கனவே சுமாா் ரூ. 750 கோடி கோரியிருப்பதை ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
தற்போது திட்டமிடல் மற்றும் முன்மொழிவு கட்டத்தில் உள்ள இந்தத் திட்டம், விரைவான நகா்ப்புறப் போக்குவரத்துக்கும் தொலைதூர சுற்றுலாவுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த வழித்தடம், மீரட்டில் உள்ள மோதிபுரத்தில் இருக்கும் தற்போதைய முனையத்திலிருந்து, என்எச்-58 பாதையைப் பின்பற்றி நீட்டிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட் எல்லைக்கு அருகிலுள்ள தௌராலா, சகௌதி, கடௌலி மற்றும் புா்காசி ஆகிய முக்கிய நிலையங்கள் பரிசீலனையில் உள்ளன. பின்னா் இது ரூா்க்கியை அடைந்து, இறுதியாக ஹரித்வாரில் உள்ள ஜ்வாலாபூா் மற்றும் ரிஷிகேஷில் முடிவடையும்.
வெறும் போக்குவரத்து வசதியைக் கடந்து, இந்த வழித்தட விரிவாக்கம் பிராந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு மகத்தான உத்வேகத்தை அளிக்க உள்ளது.
தேசிய தலைநகா் வலயம் என்சிஆா் உத்தராகண்ட் மாநிலத்துடன் மேலும் ஒருங்கிணைக்கப்படுவதால், மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள விடுமுறை இல்லங்கள், வாடகை குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான தேவை 200 சதவீதம் வரை அதிகரிக்கும் எனத் தொழில் வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
எப்போதும் நெரிசலாக இருக்கும் நெடுஞ்சாலைகளுக்கு ஒரு அதிவேக, நம்பகமான மாற்று வழியை வழங்குவதன் மூலம், நமோ பாரத் விரிவாக்கம் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த வழித்தடம் முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் மற்றும் சேவைத் துறைகளையும் மாற்றியமைக்கும்.
மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் நிலையில், தில்லியின் மையப் பகுதியிலிருந்து இமயமலைக்கு ஒரு தடையற்ற, மூன்று மணி நேரப் பயணம் என்ற கனவு நனவாவது சாத்தியமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.