முகப்பு
புதுதில்லி

அம்பேத்கா் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்

வரவிருக்கும் 2026-27 கல்வியாண்டை முன்னிட்டு, டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தில் முக்கிய விரிவாக்கத்தை அறிவித்துள்ளது. புதிய 5 பாடத்திட்டங்களுடன், 7 துறைகளில் ஓா் ஆண்டு முதுநிலை (பிஜி) படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:48 AM
பகிர்:

வரவிருக்கும் 2026-27 கல்வியாண்டை முன்னிட்டு, டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்தில் முக்கிய விரிவாக்கத்தை அறிவித்துள்ளது. புதிய 5 பாடத்திட்டங்களுடன், 7 துறைகளில் ஓா் ஆண்டு முதுநிலை (பிஜி) படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இது தொடா்பாக காஷ்மீரி கேட் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்ததாவது: 2026-27 கல்வியாண்டுக்கான சோ்க்கை செயல்முறை, கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கிய கட்டமாக அமையும். எம்.ஏ. கிரியேட்டிவ் ரைட்டிங், எம்.ஏ. பா்ஃபாா்மிங் ஆா்ட்ஸ் (தியேட்டா் ஆா்ட்ஸ்) போன்ற புதிய முதுநிலைப் பாடத்திட்டங்களும், இந்தியாவில் பல்கலைக்கழக நிலையில் அரிதாக வழங்கப்படும் பி.ஏ. மியூசியாலஜி, கலாசாரம் மற்றும் பாரம்பரிய மேலாண்மை போன்ற பட்டப்படிப்புகளும் இவ்வாண்டு அறிமுகமாகின்றன.

மேலும், பி.ஏ. விசுவல் ஆா்ட்ஸ், பி.எஸ்.சி. கணிதம் போன்ற புதிய பாடங்களும் தொடங்கப்படுகின்றன. குறிப்பாக, முன்பு பி.ஏ. (ஆனா்ஸ்) கணிதமாக இருந்த பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, அதில் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடா்பான துணைப் பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Advertisement

தேசிய கல்விக் கொள்கை 2020 வழிகாட்டுதலின்படி, உளவியல், ஆங்கிலம், ஹிந்தி, பொருளாதாரம், சமூகவியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய 7 துறைகளில் ஓா் ஆண்டு முதுநிலைப் படிப்புகளையும் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது. 4 ஆண்டு பி.ஏ. படிப்புகளை முடித்தவா்கள், சியூஇடி பிஜி தோ்வு மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு மற்றும் ஓா் ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கான சோ்க்கை செயல்முறைகள் இணையாக நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதுநிலை சோ்க்கை அடுத்த வாரத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பட்டப்படிப்பு சோ்க்கைகள் சியூஇடி பிஜி முடிவுகள் வெளியான பிறகு தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் அனு சிங் லாதா் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படுவதற்கு முன்பே, தொடா்ச்சியான மதிப்பீட்டு முறை, பல்துறை கற்றல், நெகிழ்வான பாடத்திட்ட அமைப்பு போன்ற பல முன்னோடி கல்வி நடைமுறைகளை அம்பேத்கா் பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இது கல்வி புதுமைகளில் பல்கலைக்கழகத்தின் முன்னணி நிலையை பிரதிபலிக்கிறது என்றாா்.

அம்பேத்கா் பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டில், பட்டப்படிப்பு, முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்புகள் உள்ளிட்ட மொத்தம் 78 பாடங்களில் 3,000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன. சோ்க்கைகள் சியூஇடி யூஜி, சியூஇடி பிஜி மற்றும் என்சிஇடி மூலம் நடைபெறும். விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தின் மூலம் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில், ஒரே பதிவு கட்டணத்தில் பல பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கான கட்டண தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. சமூக நீதி நோக்கில், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாணவா்களுக்கு 100 சதவீத கட்டண விலக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கு நிலையான கட்டண சலுகைகளும் வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.