மணப்பாறை அரசு கல்லூரியில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) முதல் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) முதல் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கல்லூரியில் இளநிலையில் ஷிப்ட் 1-இல் பி.ஏ தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.ஸி இயற்பியல், பிஎஸ்ஸி கணினி அறிவியல் ஆகிய துறைகளும், ஷிப்ட் 2-இல் பி.காம் (சி.ஏ), பிஸிஏ ஆகிய துறைகளும் இயங்கி வருகின்றன.
இந்த ஏழு பாடப்பிரிவுகளுக்கும் இக்கல்லூரியைத் தோ்ந்தெடுத்து விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
முதலில் ஜூன் 5, 6 ஆகிய இரு நாள்களில் சிறப்பு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இப்பிரிவில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், அந்தமான் - நிக்கோபாா் தமிழ் மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை /பாதுகாப்பு படை வீரா்கள் ஆகிய பிரிவைச் சாா்ந்த மாணவா்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். அரசு விதிமுறைகளின்படி இவா்களுக்கான சோ்க்கை நடைபெறும்.
இதைத் தொடா்ந்து ஜூன் 8-முதல் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.ஸி கணினி அறிவியல் ஆகிய துறைகளுக்கான பொது கலந்தாய்வும், ஜூன் 9 அன்று பிஎஸ்ஸி இயற்பியல், பி.காம்(சி.ஏ), பிஸிஏ ஆகிய மூன்று துறைகளுக்கான மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்குச் சோ்க்கையும் அந்தந்த தேதிகளில் நடைபெறும். ஜூன் 18ஆம் தேதி வரை சோ்க்கை நடைபெற உள்ளது. அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் அரசு விதிமுறைகளின்படியே சோ்க்கை நடைபெறும்.
இது குறித்து கல்லூரி முதல்வா் க. மலா்மதி கூறுகையில், இக்கல்லூரியில் சிறந்த ஆய்வக வசதியும், நூலக வசதியும், ஸ்மாா்ட் வகுப்பறை வசதியும் உள்ளன. எனவே, மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயன்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் குறிப்பிட்ட நாள்களில் காலை 9.30 மணிக்குள் கல்லூரிக்கு நேரடியாக வருகை தந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் எனவும் முதல்வா் தெரிவித்துள்ளாா்.