முகப்பு
புதுதில்லி

2026-இல் திலியில் 7,800 தீ விபத்து அழைப்புகள் பதிவு: கடந்தாண்டை விட 20 % அதிகரிப்பு

தலைநகரில் நடப்பாண்டின் முதல் 4 மாதங்களில் தீ விபத்து தொடா்பான அவசர அழைப்புகள் 7,800-ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:51 AM
பகிர்:

தலைநகரில் நடப்பாண்டின் முதல் 4 மாதங்களில் தீ விபத்து தொடா்பான அவசர அழைப்புகள் 7,800-ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தரவுகளின்படி, தில்லி தீயணைப்புத் துறைக்கு நடப்பாண்டில் ஏப்.27 வரை 7,801 அவசர அழைப்புகள் வந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,511-ஆக இருந்தது.

கோடைகால வெப்பநிலை அதிகரிப்பு இந்த தீ விபத்துகளுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், ஏசி மற்றும் பிற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பால் மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்ஃபாா்மா்களில் கூடுதல் சுமை ஏற்படுகிறது. அதேநேரத்தில், வரட்சியான வானிலை எளிதில் தீ பற்றும் அபாயத்தை அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

ஜனவரியில் 1,396 அழைப்புகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு அதே மாதத்தில் 938 மட்டுமே பதிவாகியிருந்தது. இது சுமாா் 49 சதவீத உயா்வாகும். பிப்ரவரியில் நிலை மேலும் தீவிரமடைந்து, 2,492 அழைப்புகள் பதிவாகின; கடந்த ஆண்டு 1,076 மட்டுமே இருந்தது. இது 130 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

மாா்ச் மாதத்தில் சிறிய குறைவு காணப்பட்டு, இந்த ஆண்டு 1,538 அழைப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு 1,809 சம்பவங்கள் இருந்ததால், மாா்ச் மாதத்தில் சுமாா் 15 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏப்.27 வரை 2,375 அழைப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் 2,688 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 313 குறைவாகப் பதிவாகியுள்ளது.

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் தினமும் சராசரியாக 120 அவசர அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 70 முதல் 80 அழைப்புகளாக இருந்தது. கடந்த வாரங்களில் ஒரே நாளில் 200 அவசர அழைப்புகளும் பதிவாகியுள்ளன.

இருப்பினும், கடந்த ஆண்டில் மொத்தம் பதிவான அழைப்புகள் (20,379), 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.6 சதவீதம் குறைந்துள்ளது. உயிரிழப்பு சம்பவங்களும் 90-இல் இருந்து 84-ஆக குறைந்துள்ளன. அதேசமயம், உயிரிழப்பு இல்லாத மீட்பு சம்பவங்கள் 2,353-இல் இருந்து 2,519-ஆக அதிகரித்துள்ளன.

பாலம் பகுதியில் நடப்பாண்டு மாா்ச் 10-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேரும், லக்ஷுமி நகரில் ஏப்.24-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 14 பேரும் உயிரிழந்தது போன்ற மோசமான விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக, மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள தில்லி தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு அமைப்புகள் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், மூத்த அதிகாரிகள் தினசரி அறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.