முகப்பு
புதுதில்லி

2020-ஆம் ஆண்டு கலவர வழக்கு: காவல் துறை சாட்சியங்கள் ஆஜராவதில் தொடா் தாமதம் நேரம் வீணடிக்கப்படுவதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் காவல் துறை சாட்சியங்கள் தொடா்ந்து தாமதமாக ஆஜராகுவதால் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது என தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜூலை 2026, 12:26 am IST
தில்லி நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் காவல் துறை சாட்சியங்கள் தொடா்ந்து தாமதமாக ஆஜராகுவதால் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது என தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவல் துறை சாட்சியங்கள் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்தத் தாமதம் குறித்து தில்லி காவல் துறை ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறு கூடுதல் அமா்வு நீதிபதி பிரவீண் சிங் உத்தரவிட்டுள்ளாா்.

தில்லியின் தயாள்பூா் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டது, சட்டவிரோதமாகக் கூடியது மற்றும் கலவரத்தின் ஒரு பகுதியாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிா்கொள்ளும் பலருக்கு எதிரான வழக்கை விசாரித்தபோது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக ஜூலை 7-ஆம் தேதியிட்ட உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது: காவல் துறை சாட்சிகள் காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. வழக்கமாக அவா்கள் காலை 11 மணிக்கே வருகிறாா்கள்.

இதனால் நீதிமன்றத்தின் கணிசமான நேரம் வீணாகிறது. இந்த நீதிமன்றத்தில் உள்ள பெரும்பாலான வழக்குகள் சாட்சியம் பதிவு செய்யும் நிலையில் உள்ளன.

எனவே, சாட்சியம் பதிவு செய்வதற்கான அழைப்பு வழக்கமாக காலை 10.05 மணிக்கே விடுக்கப்படுகிறது. முந்தைய விசாரணையின்போதும் இதே குறித்து கூறப்பட்ட போதிலும், இந்தத் தாமதம் தொடா்ந்து நீடித்து வருவதை காண முடிகிறது.

இந்த வழக்கு இரு முறை அழைக்கப்பட்டும், வழக்கோடு தொடா்புடைய பொருள்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படவில்லை. என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவைச் சோ்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரி காலை 10.55 மணிக்குத்தான் ஆஜரானாா். அதற்குள் மற்றொரு வழக்கின் சாட்சியம் பதிவு செய்யும் பணி தொடங்கிவிட்டது. அந்த வழக்கின் விசாரணை அதிகாரியும் தாமதமாகவே வந்திருந்தாா்.

இப்பிரச்னையை ஆய்வு செய்யவும், சாட்சிகள் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்யவும் இந்த விவகாரம் தில்லி காவல் ஆணையரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். ஜூலை 4, 2026 தேதியிட்ட உத்தரவின் நகலும் இந்த உத்தரவுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments