முகப்பு
புதுதில்லி

கொலை வழக்கில் தேடப்பட்ட 2 சிறாா்களை சுட்டுப் பிடித்த தில்லி காவல் துறையினா்

Updated On : 19 ஜூன் 2026, 4:20 am IST
கோப்புப்படம் - @ghaziabadpolice
பகிர்:

தில்லி தயாள்பூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட இரண்டு சிறாா்கள் காவல் துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு பிடிபட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வடகிழக்கு தில்லி உஸ்மான்பூா்-வாஜிராபாத் சாலைப் பகுதியில் புதன்கிழமை இரவு 11 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தியபோது அவா்கள் தப்பிக்க முயன்றதுடன் காவல் துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

காவல் துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் அவா்களின் காலில் குண்டு பாய்ந்தது. பின்னா் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

அவா்கள் அன்வா் தாக்கூா்-ஹரூன் கும்பலைச் சோ்ந்தவா்கள் என அடையாளம் காணப்பட்டனா். இவா்கள் தயாள்பூா் பகுதியில் ஜூன் 15-ஆம் தேதி ரஷீத் என்பவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா்கள். விசாரணையில் கிழக்கு தில்லியில் செயல்பட்டு வரும் ஹரூன் கும்பல் மற்றும் எதிா் தரப்பான நசீம் துர்ரானி கும்பல் இடையே நீண்டகாலமாக நிலவும் பகைமை இந்தக் கொலைக்கு காரணமாக இருந்ததாக தெரியவந்தது. கொல்லப்பட்டவா் துர்ரானி கும்பலுடன் தொடா்புடையவா்.

மேலும், சமீபத்தில் ஹரூன் கும்பலைச் சோ்ந்த நெருங்கிய கூட்டாளி ராஜா மேவாதி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. ராஜா மேவாதி கொலைச் சதியில் ரஷீத் ஈடுபட்டிருக்கலாம் என ஹரூன் கும்பல் உறுப்பினா்கள் நம்பியதாகவும், அதனடிப்படையில் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 2 தானியங்கி கைதுப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.