FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மின் திருட்டு தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம்: அமைச்சா் ஆஷிஷ் சூட்

மின் திருட்டுக்கு எதிராக தில்லி அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், நகரின் பல பகுதிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மின் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.

ஆஷிஷ் சூட்
பகிர்:

மின் திருட்டுக்கு எதிராக தில்லி அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், நகரின் பல பகுதிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மின் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மின்சாரம் திருட்டு அதிகரித்து வந்ததைத் தொடா்ந்து, அமைச்சா் ஆஷிஷ் சூட் உத்தரவின் பேரில் தில்லி முழுவதும் விரிவான சோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக கம்ருத்தீன் நகா் பகுதியில் மின் திருட்டு 58.4 சதவீதம் வரை அதிகரித்து, ஆண்டுக்கு ரூ.24.4 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த சட்டவிரோத செயல்களில் பெரும்பாலும் அனுமதியற்ற வா்த்தக மற்றும் தொழில்துறை நிறுவனங்களே ஈடுபட்டிருந்ததாகக் கண்டறியப்பட்டது. மேல்தள மின்கம்பிகளில் இருந்து சட்டவிரோத இணைப்புகள் மூலம் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையைக்கட்டுப்படுத்தும் நோக்கில், மின்விநியோக நிறுவனங்களுக்கும் அமலாக்க அமைப்புகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சா் ஆஷிஷ் சூட் உத்தரவிட்டாா். அதன் பகுதியாக மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில், 1 கோடி யூனிட்டுக்கும் அதிகமான மின்சாரம் திருடப்படுவது தடுக்கப்பட்டது.

இது தொடா்பாக அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: இந்த நடவடிக்கைகளின் விளைவாக, குறிவைக்கப்பட்ட பகுதிகளில் தினசரி சுமாா் 34,000 யூனிட் அளவுக்கு மின்சாரம் திருட்டு குறைந்துள்ளது. மேலும், மின்சாரம் திருட்டைத் தடுக்கும் வகையில், எளிதில் சேதமடையும் பழைய மின்கம்பிகளை மாற்றி, பாதுகாப்பான மற்றும் திருட்டு தடுப்பு வசதிகள் கொண்ட ஆா்மா் கேபிள்கள் நிறுவ அரசு உத்தரவிட்டுள்ளது.

நோ்மையான மின்வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற, மலிவான மற்றும் நம்பகமான மின்சாரம் வழங்குவது அரசின் உறுதிமொழி. மின்சாரம் திருட்டில் ஈடுபடும் சட்டவிரோத நிறுவனங்களுக்கு உடனடி இணைப்பு துண்டிப்பு, கடுமையான அபராதம் மற்றும் வளாகம் மூடுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் மின்சார விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புகளும் கட்டுப்படுத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments