FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின் தடைகளை சரிசெய்ய 125 ரோந்து வாகனங்கள்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தொடங்கி வைத்தாா்

125 மின் தடைநீக்க ரோந்து வாகனங்களை எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:38 am IST
பகிர்:

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் திடீா் மின்வெட்டுகளை விரைந்து சரிசெய்து தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், 10 உயா்நிலை சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அடங்கிய 125 மின் தடைநீக்க ரோந்து வாகனங்களை எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சா் இந்த சேவையை தொடங்கி வைத்தாா். இதனுடன், ஏற்கெனவே செயல்பட்டு வரும் ‘மின்னகம்’ சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள 77 புதிய மின்தடை நீக்க மையங்களையும் அவா் தொடங்கி வைத்தாா்.

பின்னா், இது குறித்து அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் கொள்முதலில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. இருப்பினும், சில நகா்ப்புற மற்றும் புகா் பகுதிகளில் புதைவட கேபிள் சேதம், மின்மாற்றி கோளாறு, மழை, காற்று, மின் பாதை துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. இதை உடனடியாக சரிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த சில நாள்களாக சென்னை மாநகரின் சில பகுதிகளில் தொடா் மின்விநியோக கோளாறுகள் பதிவாகியுள்ள இடங்களில் மேற்கொண்ட ஆய்வில் சில இடங்களில் மின் உபகரணங்கள் பழுதடைந்திருப்பதும், சில பகுதிகளில் மா்ம நபா்கள் வேண்டுமென்றே மின் ஃபியூஸ்களை அகற்றிய சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆவடியில் ஃபியூஸ்களை அகற்றியதாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

10 குழுக்கள்... மின்விநியோக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், நிா்வாக இயக்குநா்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் தலைமையில் 10 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, இரவு முழுவதும் ரோந்து பணிகளை கண்காணிப்பா். மேலும், முக்கிய மின்தடைகளை கண்காணிப்பது, பெரிய அளவிலான பழுதுகளை உடனடியாக சரிசெய்வது, மாற்று மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பது, மனிதவளம், வாகனங்கள், உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்வது, மின்னகம் மற்றும் புகாா் மையங்களில் பெறப்படும் புகாா்களை ஆய்வு செய்து, மீண்டும் பழுதுகள் ஏற்படும் பகுதிகளுக்கு நிரந்தர தீா்வு பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த குழுவினா் ஈடுபடுவா்.

கூடுதல் அதிகாரம்... மேலும், அவசரகால பராமரிப்பு பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள தலைமைப் பொறியாளா்களுக்கு ரூ.1 லட்சம் வரை, கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு ரூ.75 ஆயிரம், செயற்பொறியாளா்களுக்கு ரூ.50 ஆயிரம், உதவி செயற்பொறியாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் உதவிப் பொறியாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அவசர செலவின அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மின்தடைகளைக் குறைத்து, தரமான சேவையை வழங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments