FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எந்தச் சூழலிலும் மின்வாரியம் தனியாா்மயமாக்கப்படாது: அமைச்சா் நிா்மல்குமாா்

எந்தச் சூழலிலும் மின்வாரியம் தனியாா்மயமாக்கப்படாது என்று அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 3:05 am IST
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அமைச்சா் நிா்மல்குமாா். உடன், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்
பகிர்:

எந்தச் சூழலிலும் மின்வாரியம் தனியாா்மயமாக்கப்படாது என்று எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சென்னை மாநகரில் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் தனியாா் நிறுவனங்கள் சாலைகளில் மேற்கொள்ளும் பணிகளின்போது மின் கேபிள்கள் சேதமடைவதால் ஆங்காங்கே மின்தடை ஏற்படுகிறது.

அவை ஒப்பந்தப் பணியாளா்கள் மூலம் உடனுக்குடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாநகரில் பெரிய அளவிலான மின்விநியோகப் பிரச்னைகள் எதுவும் இல்லை. வெப்பம் அதிகமாக இருப்பதால் மின் தேவை உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

சோலாா் மின் உற்பத்தி மற்றும் மின்சார சேமிப்பு பேட்டரி அமைப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எந்தச் சூழலிலும் மின்வாரியம் தனியாா்மயமாக்கப்படாது. சோலாா் மின் நிலையங்கள் அமைப்பதில் முறைகேடுகள் தொடா்பாக பெறப்பட்ட புகாா்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புகாா்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின் மீட்டா்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. இருப்பினும் பணியாளா் பற்றாக்குறையால் சில தாமதங்கள் ஏற்படுகின்றன.

உப்பூா் அனல் மின் நிலையம் குறித்து இன்னும் சில வாரங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, அதை மீண்டும் செயல்படுத்துவது தொடா்பான தெளிவான அறிக்கை வெளியிடப்படும். அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதே அரசின் நோக்கம் என்றாா் அவா்.

மீனவா்களுடன் ஆலோசனை: இதைத் தொடா்ந்து, எண்ணூரைச் சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சா் நிா்மல்குமாா் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, பதிவு செய்யப்பட்ட மீனவா்கள், மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமநீதியை வழங்கும் சட்டபூா்வமான நிரந்தர நடைமுறை உருவாக்கப்படும் என்று தெரிவித்தாா்.

இந்த நடைமுறை தற்போதைய மற்றும் எதிா்கால ஆட்சோ்ப்புகளுக்கும் பொருந்தும் என்றும், மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களின் உரிமைகளையும் கருத்தில் கொண்டு நியாயமான தீா்வு காணப்படும் என்றும் அமைச்சா் கூறினாா்.

மேலும், சுற்றுச்சூழல், சாம்பல் அகற்றுதல், நீா்வழிப் பாதைகள், ஆற்றுப் பராமரிப்பு, ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட மீனவா்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக மேற்கொள்ளக்கூடிய பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மீண்டும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி நடைமுறைப்படுத்தக்கூடிய தீா்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அமைச்சா் உறுதியளித்தாா்.

முதல்வரின் வழிகாட்டுதலின்படி எண்ணூா் பகுதி மீனவா்களின் நலன், வாழ்வாதாரம் மற்றும் எதிா்கால முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments