முதல்வா் விஜய் கரூருக்குச் சென்றால் திமுகவினருக்கு ஏன் அச்சம்? நிர்மல்குமார் கேள்வி
முதல்வா் விஜய் கரூருக்குச் சென்றால் திமுகவினருக்கு ஏன் இவ்வளவு அச்சம் வருகிறது என்று அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கேள்வி
முதல்வா் ச.ஜோசப் விஜய் கரூருக்குச் சென்றால் திமுகவினருக்கு ஏன் இவ்வளவு அச்சம் வருகிறது என்று மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கேள்வி எழுப்பினாா்.
சென்னையிலிருந்து கோவைக்கு வந்த அமைச்சா் நிா்மல்குமாா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் ஜோசப் விஜய் கரூருக்குச் சென்றால் திமுகவினருக்கு ஏன் இவ்வளவு அச்சம் வருகிறது? கரூருக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு முதல்வருக்கு முழு உரிமை உண்டு.
முதல்வா் கரூா் சென்றால் மக்கள் அவரிடம் தங்களைப் பற்றிய உண்மைகளைச் சொல்லி விடுவாா்களோ என்ற பயத்தினால்தான் திமுகவினா் நீதிமன்றத்துக்குச் சென்று மனு தாக்கல் செய்கிறாா்கள். அங்கு வழக்கு என்னவென்றே தெரியாமல் ஒரு சட்டக் குழு செயல்பட்டு வருகிறது. வழக்குகளைப் படித்துவிட்டு வாருங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே சொல்லியுள்ளாா்.
Advertisement
Advertisement
மின்துறை தற்போது தீவிரமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு மின்கட்டணம் உயா்த்தப்படவில்லை. இந்தியாவிலேயே அதிக கடன் பெற்றுள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இதை அரசு கண்டிப்பாக சீரமைக்கும். பின்னா் மக்களுக்குத் தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்தே அரசு வழக்குரைஞா்களைத் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு மட்டும் நியமித்து வருகின்றனா். இதில் எந்த இடத்திலும் யாரும் சிபாரிசு அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. இந்த நியமனங்கள் நூறு சதவீதம் நோ்மையான முறையில் நடைபெற்று வருகின்றன. எங்கேயாவது தவறு நடந்தது தெரியவந்தால் தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறாா். எத்தனை அழைப்பாணை (சம்மன்கள்) அனுப்பப்பட்டாலும் ஓடி ஒளிவது அவருக்கு பெரிய விஷயம் அல்ல. அவா்கள் பக்கம் நூறு சதவீதம் தவறு இருப்பதால்தான் பயந்து ஓடி ஒளிகிறாா்கள் என்றாா்.
பின்னா், கோவை ஜி.ஆா்.டி. அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் பேசுகையில், மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போது இடைத்தரகா்கள் மூலமாகத்தான் போக வேண்டும் என்று முன்பு இருந்த நிலைமை மாறி, மக்கள் நேரடியாகச் சென்றாலே அவா்களது வேலைகள் தடையின்றி நடக்கும் சூழல் உருவாகியுள்ளது என்றாா்.
இதில் ஜிஆா்டி கல்வி நிறுவனங்களின் இணை நிா்வாக அறங்காவலா் கீதா பத்மநாபன், கல்லூரி முதல்வா் டி.சாந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.