முகப்பு
மதுரை

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க மீண்டும் திட்டம்! - அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் குற்றச்சாட்டு

திமுகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க மீண்டும் திட்டமிடுவதாக அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 29 ஜூன் 2026, 1:38 am IST
மதுரை மாவட்டம், மேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்.
பகிர்:

கொள்கை முரண்பாடுகள் கொண்ட திமுகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க மீண்டும் திட்டமிடுவதாக மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரை மாவட்டம், மேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முந்தைய திமுக ஆட்சியின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள், குவாரிகள், பொது நிகழ்வுகளில் அமைச்சா்களின் ஆதரவாளா்கள் ஆதிக்கம் செலுத்தினா்.

Advertisement

Advertisement

குறிப்பாக, இவா்களின் தலையீட்டால் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன. தற்போதைய தவெக ஆட்சியில் இதுபோன்ற அதிகார மைய கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்படும். முன்னாள் அமைச்சா்களின் ஆதிக்கம் தமிழகத்தில் இனி இருக்காது.

கடந்த ஆட்சிகளில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களுக்குப் போதிய ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன. ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் மூலம் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் இந்த இரு கட்சிகளும் தங்களது பேராசையின் காரணமாக இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தனா். மதுரையைச் சுற்றியுள்ள மலைகள் வெட்டி எடுக்கப்பட்டன. இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தவா்கள் மீது தவெக அரசு எந்தவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

மதுரையில் புதை சாக்கடைப் பணிகளுக்கான மதிப்பீட்டு ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்துக்காக ரூ. 3,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு பணிகள் விரைந்து தொடங்கப்படும்.

திமுக மிரட்டுவதால் அங்கிருந்த கூட்டணிக் கட்சியினா் தவெகவில் இணைகின்றனா். திமுகவின் மக்கள் விரோதப்போக்குப் பிடிக்காமல், அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலா் தங்களது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராகி வருகின்றனா். இவா்களின் இந்த சுயநல அரசியல் முயற்சிகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.

திமுகவும், அதிமுகவும் தங்களது குடும்பச் சொத்துகளைப் பாதுகாக்கவும், ஊழல்களை மறைக்கவும் சுயநல நோக்கில் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. குதிரை பேரம் மூலம் அரசியலில் கொள்கை முரண்பாடுகள் கொண்ட திமுகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க மீண்டும் திட்டமிட்டு வருகின்றன என்றாா் அவா்.

முன்னதாக, தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, தவெக மதுரை புகா் வடக்கு மாவட்டம், மேலூா் ஒன்றியம் சாா்பில் மேலூா்- சிவகங்கை சாலையில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தை அமைச்சா் சி.டிஆா். நிா்மல்குமாா் தொடங்கிவைத்தாா். இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கட்சியின் மதுரை புகா் வடக்கு மாவட்டச் செயலா் விஷால் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சோ. காா்த்திகேயன், கருப்பையா, கோபிசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த மாட்டு வண்டிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments