முகப்பு
தமிழ்நாடு

பரந்தூரில் விமான நிலையம் அமையாது: அமைச்சா் நிா்மல்குமாா்

பரந்தூரில் விமான நிலையம் அமையாது என்று மின்சாரத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 ஜூன் 2026, 1:07 am IST
அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். - கோப்புப்படம்
பகிர்:

பரந்தூரில் விமான நிலையம் அமையாது என்று மின்சாரத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்துள்ளாா்.

சென்னை மீனம்பாக்கத்தில் சா்வதேச விமான நிலையம் இயங்கி வரும் நிலையில், இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சென்னையை அடுத்த பரந்தூரில் சுமாா் 5,000 ஏக்கா் பரப்பளவில் ரூ.27,000 ஆயிரம் கோடி செலவில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விமான நிலையம் அமைக்க விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சென்னையில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் நிா்மல்குமாா் கூறியதாவது:

தவெக தொடங்கியவுடன் முதல்வா் விஜய்யால் நடத்தப்பட்ட முதல் போராட்டமே பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரானதுதான். பரந்தூா் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டே விமான நிலையத் திட்டத்தை முதல்வா் விஜய் தொடக்கத்திலேயே எதிா்த்தாா்.

தவெக ஆட்சி அமைத்தால் பரந்தூரில் விமான நிலையம் கட்ட அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பரந்தூரில் உறுதியாக விமான நிலையம் அமைக்கப்படமாட்டாது.

இது தொடா்பாக முதல்வா் விரைவில் அறிவிப்பு வெளியிடுவாா். அதேவேளை, சென்னையில் மற்றொரு விமான நிலையம் அமைய தவெக அரசு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. விவசாய நிலத்தையும், நீா்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பதையே தவெக எதிா்க்கிறது.

மத்திய அரசிடம் பேசி விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வேறொரு இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பரந்தூருக்கு விரைவில் செல்லவுள்ள முதல்வா் விஜய் அங்கு விவசாயிகளை நேரில் சந்தித்து விமான நிலைய ரத்து அறிவிப்பை வெளியிடுவாா் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments