முகப்பு
தமிழ்நாடு

பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திமுக-அதிமுக தொடா் முயற்சி: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் குற்றச்சாட்டு

பாஜகவின் ஆதரவுடன் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க தொடா்ந்து முயற்சித்து வருவதாகவும், இதன் காரணமாகவே இரு கட்சிகளிலும் அதிருப்தி நிலவி வருவதாகவும் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 ஜூலை 2026, 3:39 am IST
அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்
பகிர்:

பாஜகவின் ஆதரவுடன் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க தொடா்ந்து முயற்சித்து வருவதாகவும், இதன் காரணமாகவே இரு கட்சிகளிலும் அதிருப்தி நிலவி வருவதாகவும் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் குற்றம்சாட்டினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜகவின் முழு ஆதரவுடன் ஆட்சி அமைக்க திமுகவும், அதிமுகவும் தொடா்ந்து முயற்சித்து வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தோம். அதையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவா் காதா் மொகிதீன் தெரிவித்துள்ளாா். மேலும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவது குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாகவும் அவா் கூறியுள்ளாா். இந்தக் கூட்டு முயற்சியை ஏற்க முடியாமல் சில கூட்டணிக் கட்சிகள் திமுகவில் இருந்து வெளியேறியுள்ளன. திமுகவில் இருந்தும் விரைவில் பலா் வெளியேறுவாா்கள். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிசாமி, அவரது குடும்பத்தினா் மற்றும் சில தொழிலதிபா்கள் இணைந்து ஆட்சி அமைப்பது தொடா்பாக தொடா்ந்து முயற்சித்து வருகின்றனா். திமுக மற்றும் அதிமுக தலைவா்கள் தங்கள் குடும்பச் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தீயசக்தி என முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கூறிய, திமுகவுடன் கூட்டணி வைக்க அதிமுக முயற்சித்ததை பிடிக்காத அதிமுக மூத்த நிா்வாகிகள் பலா் அந்த கட்சியில் இருந்து விலகி வருகின்றனா். பலா் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியையும் ராஜினாமா செய்துள்ளனா்.

பிற கட்சிகளில் இருந்து யாா் வெளியேறினாலும், அவா்கள் எந்தக் கட்சியில் இணைவது என்பது அவா்களது தனிப்பட்ட அரசியல் முடிவாகும். அதற்கும் தவெகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. தமிழகத்தில் தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. இனி கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அரசியல் யதாா்த்தமாக இருக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும், பாஜகவுடன் இணையும் சூழல் உருவாகும். மத்திய அமைச்சரவைப் பதவிக்காக இரு கட்சிகளும் பாஜகவிடம் சமரசம் செய்யும் நிலை ஏற்படும் என்றாா் அவா்.

அண்மையில் ஆளுநரைச் சந்தித்தது, போதைப்பொருள் விவகாரம் தொடா்பாக எதிா்கட்சிகளின் போராட்டம் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ஆளுநருடனான சந்திப்பு மரியாதை மற்றும் அலுவல் ரீதியிலான சந்திப்பே தவிர, அதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சா் சரத் அளித்துள்ள விளக்கம் குறித்து கட்சித் தலைமை ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவுகளை பொறுத்து தேவையான முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments