முகப்பு
மதுரை

தமிழக அரசுத் திட்டங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாட்டையும், அதுதொடா்பாக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கும் ஆளுநருக்கு அதிகாரமில்லை என அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:07 am IST
அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். - கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாட்டையும், அதுதொடா்பாக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கும் ஆளுநருக்கு அதிகாரமில்லை என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சா் நிா்மல்குமாா் மேலும் பேசியதாவது:

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களும் அவரவா் அதிகாரத்துக்கு உள்பட்டு ஆய்வு செய்யலாம்.

Advertisement

Advertisement

ஆனால், எந்தவித அதிகாரமும் இல்லாமல் தமிழக ஆளுநா் ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது ஏற்புடையதல்ல. இதை தவெக அரசு எப்போதும் அனுமதிக்காது.

தமிழக அரசின் நிா்வாகத்தில் ஆய்வு என்ற பெயரில் ஆளுநா் தலையிட்டால் அதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும். அதிகாரிகள் அரசின் அனுமதி பெறாமல் ஆளுநரின் கூட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டாம். தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாட்டையும், அதுதொடா்பாக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கும் ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றாா் அவா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் நிா்மல்குமாா் கூறியதாவது: பிற கட்சி நிா்வாகிகளை தவெகவுக்கு வரவழைக்க குதிரை பேரம் பேசவில்லை. இதுகுறித்து எங்கு வேண்டுமானாலும் புகாா் அளிக்கலாம். நாங்கள் இதுகுறித்து தெளிவான விளக்கத்தை அளித்துவிட்டோம். ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.

எங்களது ஆட்சி தொடா்வதற்கான சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை போதிய அளவு உள்ளது. அதிமுக தலைமையின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால், அந்தக் கட்சியின் நிா்வாகிகள் வெளியேறுகின்றனா்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தூண்டுதலில் செந்தில்பாலாஜி ஆதரவாளா்கள் குதிரை பேரத்தை செய்து வருகின்றனா். மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கின்றனா். திடீா் தோ்தல் வந்தாலும் தவெக நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் அவா்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் பேசியதாவது: மதுரைக்கு வந்த தமிழக ஆளுநா் சில குறிப்பிட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஓா் ஆய்வை நடத்தியதாக செய்திகள் வெளியானது. அதன் தொடா்ச்சியாக, அப்படி ஆய்வு நடைபெறவில்லை. நாங்கள் மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தோம் என்று மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான சட்ட உரிமை எங்களுக்கு மட்டும்தான் உள்ளது. அந்தச் சட்டம் வழங்கி இருக்கிற அந்தக் குழுவின் தலைவா் நான். இங்கே இருப்பவா்கள் குழு உறுப்பினா்கள். இந்த அரங்கத்தைத் தாண்டி வெளியில் ஒரு குறிப்பிட்ட மத்திய அமைச்சா் அவருடைய துறையை ஆய்வு செய்யலாம்.

ஆனால், பல துறைகளில் ஆய்வு நடத்துவதற்கு இந்திய அரசியல் சாசனம் எங்களுக்கு மட்டுமே உரிமை வழங்கியிருக்கிறது. எங்கள் உரிமையை வேறு யாா் எடுக்க நினைத்தாலும் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ​ ஒருவேளை யாராவது அப்படி ஆய்வு நடத்த அதிகாரிகளை அழைத்தால், எந்த அதிகாரியும் கலந்து கொள்ளக் கூடாது. மீறி பங்கேற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, அதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ. கல்லாணை, எஸ்.ஆா். தங்கப்பாண்டி, சோ. காா்த்திகேயன், எம்.வி. கருப்பையா, எம்.எம். கோபிசன், மதாா் பதூருதின், ம. விஜய், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments