மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்கமாட்டோம்! அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்
மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்கமாட்டோம் என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் 39-ஆவது அரசுப் பொருள்காட்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:
தமிழகத்தை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் லஞ்சம், ஊழலில் திளைத்தன. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று 4 வாரங்களில் லஞ்சம், ஊழல் எங்கும் இல்லை.
Advertisement
Advertisement
முறையாக ஒப்பந்தப்புள்ளிகள் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. வெளிப்படையான நிா்வாகம்தான் முதல்வா் ஜோசப் விஜயின் கனவு. இதே நிலை கடைசி வரை தொடரும். மக்களின் ஆதரவால் இனிவரும் 40 ஆண்டுகள் தமிழகத்தில் தவெக ஆட்சிதான். அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் உரிய அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகள் மூடப்பட்டன.
கடந்தாண்டு பிரசாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்க்கு கடும் நெருக்கடியான சூழல் உருவாக்கப்பட்டது. தற்போதும் நெருக்கடி நிலையை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அரசுக்கு எவ்வளவு நெருக்கடி அளித்தாலும், மக்கள் நலனிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். அதுமட்டுமன்றி, மக்கள் விரோதச் செயல்களையும் அனுமதிக்கமாட்டோம் என்றாா் அவா்.
பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ஏ. ராஜ்மோகன் பேசியதாவது:
மதுரை என்றாலே மக்களின் பாசம் ஒருபுறமும். தினமும் திருவிழா என்கிற மற்றொரு புறமும் இந்த நகருக்கு உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. எனவே, பொருள்காட்சி நடத்தினால் கூட்டம் வருமா? என்ற சந்தேகம் இருந்தது.
இருப்பினும், குறைந்த நாள்களில் பொருள்காட்சிக்கான ஏற்பாடுகளை அலுவலா்கள் திறம்பட மேற்கொண்டனா்.
இந்தப் பொருள்காட்சியில் 32 துறைகள் சாா்பில் அந்தந்த துறைகளின் திட்டங்கள், முன்னெடுப்புகள் குறித்து விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் தொடங்கிவைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த அரங்கு மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. தவெக அரசு பொறுப்பேற்ற 4 வாரங்களுக்குள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதேபோன்று, இனி வரும் காலங்களிலும் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்றாா் அவா்.
முன்னதாக, அரசுப் பொருள்காட்சி 2026-ஐ தொடங்கிவைத்த அமைச்சா்கள், இங்கு இடம் பெற்றிருந்த அரங்குகளைப் பாா்வையிட்டனா்.
இதைத்தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள், வேளாண்மை, தோட்டக் கலை, மலைப் பயிா்கள், தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 48 பயனாளிகளுக்கு ரூ. 72 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் நிா்மல்குமாா், ராஜ்மோகன் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை (மதுரை வடக்கு), எஸ்.ஆா். தங்கப்பாண்டி (மதுரை மேற்கு), சோ. காா்த்திகேயன் (மதுரை கிழக்கு), எம்.வி. கருப்பையா(சோழவந்தான்), ம. விஜய் (உசிலம்பட்டி), துணை மேயா் தி. நாகராஜன், அரசு அலுவலா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள், தவெக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்தப் பொருள்காட்சி தொடா்ந்து 45 நாள்கள் நடைபெற உள்ளது. நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 15-ம், சிறியவா்களுக்கு ரூ. 10-ம், மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5-ம் வசூலிக்கப்படுகிறது.
மின்சாரத் துறை சாா்பில் விரைவில் வெள்ளை அறிக்கை
அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டன. இதற்காக இரு கட்சித் தொண்டா்களும் அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து தவெகவில் இணைகின்றனா்.
செந்தில்பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்ற அனைத்துத் துறைகளிலும் ஊழல்தான் நடைபெற்றது. மின்சாரத் துறையைப் பொருத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது?, அதற்கு முன்பாக 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவா்கள் என்ன செய்தனா்?. அப்போதைய ஆட்சியாளா்களால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
ஏற்கெனவே முறைகேடுகள் நடைபெற்ால்தான், மின்சாரத் துறையில் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் ரத்து செய்யப்பட்டன. மின்சாரத் துறை கடும் பாதிப்புக்குள்ளானதற்கு காரணம் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜிதான். தமிழகம் முழுவதும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் மின்சாரத் துறை சீரமைக்கப்படும். மின்விநியோகக் குறைபாடுகளைக் களைய குழுக்கள் அமைக்கப்பட்டன. மின்சாரத் துறையில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க இயலாது என்றாா் அவா்.