FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

போலி பத்திரப் பதிவுகள் தொடா்பாக கடும் நடவடிக்கை: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற போலி பத்திரப் பதிவுகள் தொடா்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 3:45 am IST
மதுரை, சிம்மக்கல் கோவிந்தன் செட்டி தெருவில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட வட்டார அளவிலான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை சனிக்கிழமை திறந்துவைத்த அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்.
பகிர்:

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற போலி பத்திரப் பதிவுகள் தொடா்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் பலருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கோயில் நிலங்கள், ஏரிகள், குளங்களுக்கும் போலியான பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

பத்திரப் பதிவுத் துறை அலுவலா்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. யாா் தவறு செய்திருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களுக்கான போலி பத்திரப் பதிவுகள் குறித்து பொதுமக்கள் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் வாரிய ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள ஒப்பந்தப் பணியாளா்களைக் கணக்கிட வேண்டும். இதன்பிறகே அடுத்தகட்ட நிலைப்பாடுகள் குறித்து முடிவு எடுக்க முடியும்.

முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அண்மையில் பேசிய போது, திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டாா். இது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. திமுகவும், பாஜகவும் மறைமுகக் கூட்டணியில் உள்ளது என்பதையே அவா் வெளிப்படுத்தியுள்ளாா்.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்ததால்தான் திமுக கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 57 தொகுதிகளில் வென்றது. தனித்துப் போட்டியிட்டிருந்தால் 20 தொகுதிகளில்கூட திமுக வென்றிருக்காது.

திமுக, அதிமுக, பாஜக இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதால்தான் திமுகவின் கூட்டணிக் கட்சிகள், அந்தக் கூட்டணியிலிருந்து விலகின. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிலா் பதவி விலகியதற்கும் இதுவே காரணம் என்றாா் அவா்.

சேவை மையம் தொடக்கம்: முன்னதாக, மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வாா்டு எண் 50-இல் சிம்மக்கல், கோவிந்தன் செட்டி தெருவில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், அமைக்கப்பட்ட வட்டார அளவிலான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தொடங்கிவைத்தாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம். கோபிசன், மதாா் பதுருதீன், மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments