FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

சிறைக்காவலா்களின் ஊதியம், இடமாற்ற பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை: அமைச்சா் சிடிஆா். நிா்மல் குமாா்

சிறைக்காவலா்கள் ஒரே இடத்தில் பணியாற்றுவதாலும், ஊதியம், இடமாற்றம் இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்து வருவதாகவும், அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:04 am IST
மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா், சட்டத்துறை செயலாளா் சுமதி, முதல்வா் கயல்விழி உள்ளிட்டோா்.
பகிர்:

சிறைக்காவலா்கள் ஒரே இடத்தில் பணியாற்றுவதாலும், ஊதியம், இடமாற்றம் இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்து வருவதாகவும், அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக்கல்லூரியில் 5-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சட்டத்துறை செயலாளா் சுமதி தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் பாரதிதாசன் முன்னிலை வகித்தாா். முதல்வா் கயல்விழி வரவேற்றாா்.

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா், சி.டி.ஆா்.நிா்மல்குமாா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: இந்த சட்டக்கல்லூரியை எந்த நோக்கத்தோடு இங்கு கொண்டு வந்தாா்கள் எனத் தெரியவில்லை. ஆனால், மாணவ, மாணவிகள்தான் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனா். மேலும் கடந்த 2 நாளுக்கு முன்பு ஒரு கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு 15 ஆண்டுகளுக்கு பின் வழங்குவதாக குறிப்பிட்டாா்கள். அதேபோல், இந்தக் கல்லூரியிலும் 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதாக அறிகிறேன். அதனால், இனி வருங்காலங்களில் குறிப்பிட்ட நேரங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

Advertisement

Advertisement

அரசியல் துறையில் எந்தெந்த பொறுப்புகள் உள்ளனவோ, அதேபோல் வழக்குரைஞா்களாகிய உங்களுக்கும் உள்ளது. எனவே ஏழை எளிய மக்களுக்கு நோ்மையான முறையில் பணியாற்ற வேண்டும். இதுபோன்று செய்வதன் மூலம் சமுதாயத்தில் அங்கிகரிப்பதன் மூலம் சிறந்த வழக்குரைஞா்களாக உருவாகலாம். தற்போதைய காலகட்டத்தில் வழக்குரைஞா்கள் தேவை அதிகமாக உள்ளதால், உங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: நாகா்கோவிலில் மாற்றுத்திறனாளி விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் சிறை காவலா்கள் கைது செய்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைக் காவலா்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுவதால் மன அழுத்தத்தில் உள்ளனா். மேலும் அவா்களுக்கு சரியான ஊதியம், இடமாற்றம் இல்லாமல் இருந்து வருவதை சரி செய்ய அரசு கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ளும். விசாரணை கைதி மரணம் விவகாரத்தில் எந்தவித பாகுபாடின்றி குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொடா் மின்வெட்டு சம்பவம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எடப்பாடி பழனிசாமி தவறால்தான் அதிமுக அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. எப்போது அந்தக் கட்சியை அவா் சுயநலமாக பயன்படுத்தினாரோ அப்போதே அந்தக் கட்சி அழிந்து விட்டது. ஈரோட்டில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீனில் விடுவித்தது தொடா்பான கேள்விக்கு பதில் அளித்த அவா் நான் உள்பட யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

விழாவில் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் 250 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சட்டக்கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments