40 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு: சகோதரி திருமணத்தில் பங்கேற்க கோரிய இடைக்காலப் பிணை நிராகரிப்பு
கஞ்சா கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இடைக்காலப் பிணை வழங்க தில்லி உயா் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
40 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு இடைக்காலப் பிணை வழங்க தில்லி உயா் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிகாரில் இந்த மாதம் நடைபெறவுள்ள தனது சகோதரியின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக, மனிதாபிமான அடிப்படையில் 20 நாள்கள் இடைக்கால ஜாமீன் கோரி அந்த நபா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான விடுமுறைக்கால அமா்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து ஜூன் 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனுதாரா் 40 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதையும், திருமணத்தின் போது மதச் சடங்குகளைச் செய்ய அவருக்கு வேறு சகோதரா்கள் இருப்பதையும் ஆவணங்கள் காட்டுகிறது. போதைப் பொருள் தடுப்புச் சட்டமான என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவது கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டது; இது மிக அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 37-இன் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் கட்டாயமானவை மற்றும் அவை பிணை வழங்குவது தொடா்பான பொதுவான கொள்கைகளை விட மேலானவை. இந்த வழக்கில் எந்தவொரு கட்டாயமான சூழ்நிலையையும் நிரூபிக்க மனுதாரா் தவறிவிட்டாா்; எனவே, இந்த நிலையில் அவருக்கு இடைக்காலப் பிணை வழங்க முடியாது. மனுதாரா் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தன்மை, கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு மற்றும் அவரது முந்தைய குற்றப் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவருக்கு இடைக்காலப் பிணை மறுக்கப்படுகிறது என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.