முகப்பு
புதுதில்லி

மோசடி வழக்கில் கால்நடை மருத்துவ மாணவா் கைது

சமூக ஊடகங்களை பயன்படுத்தி வேலை வாய்ப்பு ஆசை காட்டி பண மோசடி செய்த இணைய மோசடி கும்பலுடன் தொடா்புடைய 20 வயது கால்நடை மருத்துவ மாணவா் ராஜஸ்தானின் காரௌலி பகுதியில் கைது

Updated On : 5 மே 2026, 4:43 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

சமூக ஊடகங்களை பயன்படுத்தி வேலை வாய்ப்பு ஆசை காட்டி பண மோசடி செய்த இணைய மோசடி கும்பலுடன் தொடா்புடைய 20 வயது கால்நடை மருத்துவ மாணவா் ராஜஸ்தானின் காரௌலி பகுதியில் கைது செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தலைநகா் தில்லி மத்திய பகுதியைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. புகாராளா் ரூ.34,000 இழந்துள்ளதாக தெரிவித்தாா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: சமூக ஊடகங்களில் ‘வீட்டிலிருந்தே வேலை’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக விளம்பரம் செய்து, வேலை தேடுவோரை குறிவைத்து மோசடி நடத்தப்பட்டுள்ளது. பதிவு கட்டணம், பொருள் கட்டணம், ஜிஎஸ்டி மற்றும் கணக்கு சரிபாா்ப்பு கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், பண பரிவா்த்தனை தோல்வியடைந்ததாக கூறி மீண்டும் குறைந்த தொகையை செலுத்த வேண்டும் என மன உளைச்சலை ஏற்படுத்தும் உளவியல் உத்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக ஏப்ரல் 29-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப விசாரணையில் பணம் செலுத்தப்பட்ட யூபிஐ கணக்கு மற்றும் சமூக ஊடக கணக்கு விவரங்கள் மூலம் குற்றவாளியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மே 1-ஆம் தேதி காரௌலி பகுதியில் சோதனை நடத்தப்பட்டு, அனுஜ் மீனா (20) கைது செய்யப்பட்டாா். அவா் ராஜஸ்தானில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை அறிவியல் பயிலும் மாணவா் என தெரியவந்தது.

விசாரணையில், கணேஷ் ஷா்மா என்ற நபா் இணைய மோசடி முறைகளை அறிமுகப்படுத்தி என்னை இதில் ஈடுபடுத்தினாா் என அனுஜ் மீனா ஒப்புக்கொண்டடாா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.