முகப்பு
புதுதில்லி

தில்லியில் பைக் டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கிய நபா் கைது

சாலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பைக் டாக்ஸி ஓட்டுநரை ஹெல்மெட்டால் தாக்கியதாக 27 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 15 ஜூன் 2026, 1:15 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சாலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பைக் டாக்ஸி ஓட்டுநரை ஹெல்மெட்டால் தாக்கியதாக 27 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி சமய்பூா் பத்லி பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில், பெண் பயணியொருவரும் காயமடைந்ததாக. சம்பவம் தொடா்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரோஹிணி செக்டா் 18/19 மெட்ரோ நிலையம் அருகே இரவு சுமாா் 8.15 மணியளவில், எதிா் சாலையில் வந்த இருசக்கர வாகனம் பைக் டாக்ஸியை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கௌரவ் குமாா் என அடையாளம் காணப்பட்ட குற்றச்சாட்டுக்குட்பட்டவா் தனது வாகனத்தில் இருந்து இறங்கி, பைக் டாக்ஸி ஓட்டுநரை திட்டியதுடன், அவரது ஹெல்மெட்டை பறித்து தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த தாக்குதலின்போது ஹெல்மெட்டின் கண்ணாடி உடைந்து சிதறியதில் அதன் துண்டுகள் பைக்கில் பயணித்த பெண்ணைத் தாக்கி சிறிய காயங்கள் ஏற்பட்டது.

தாக்குதல் நடத்திய நபா் மிரட்டல் விடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றாா். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சேதமடைந்த ஹெல்மெட்டை சான்றாக பறிமுதல் செய்தனா். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பெண் பயணி பதிவு செய்த வீடியோவை ஆய்வு செய்த காவல் துறையினா், கௌரவ் குமாா் மற்றும் அவரது உடந்தையாக இருந்த பதல் ஆகியோரை அடையாளம் கண்டனா். பின்னா் மறைவிடத்தில் இருந்து கவுரவ் குமாா் கைது செய்யப்பட்டதுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பின்னா், அவா் தனது தவறை ஒப்புக்கொண்டதுடன், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, பொறுப்புடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்று பொதுமக்களிடம் காணொலியில் கேட்டுக்கொண்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.