வடகிழக்கு பெண்களைத் தாக்கி பாலியல் துன்புறுத்தல்: காவல்துறை தீவிர விசாரணை
தென்கிழக்கு தில்லியில் உள்ள நேரு பிளேஸ் பகுதியில், வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த இரு பெண்கள் மீது பாலியல் தொந்தரவு, தாக்குதல் மற்றும் இனவெறி கருத்துகள் கூறப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
தென்கிழக்கு தில்லியில் உள்ள நேரு பிளேஸ் பகுதியில், வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த இரு பெண்கள் மீது பாலியல் தொந்தரவு, தாக்குதல் மற்றும் இனவெறி கருத்துகள் கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் தொடா்புடைய 4 பேரை அடையாளம் கண்டுள்ளதுடன், அவா்களை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் மே 10-ஆம் தேதி அதிகாலை சுமாா் 6.30 மணியளவில், அப்பகுதியிலுள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே உள்ள தேநீா் கடை அருகே நடைபெற்றது. இது தொடா்பாக காலை 7 மணிக்கு அழைப்பு வந்தவுடன் கல்காஜி காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
Advertisement
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் படி, அவா்கள் கேளிக்கை விடுதிக்கு வெளியே தேநீா் அருந்திக் கொண்டிருந்தபோது, இருவா் அவா்களை நோக்கி கேலிச் சொற்கள் மற்றும் ஒழுங்கற்ற கருத்துகளை கூறியதாகத் தெரிவித்தனா். அதன்பின்னா் மேலும் சிலா் அங்கு சோ்ந்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் போது தம்மில் ஒருவரிடம் பாலியல் அத்துமீறல் நடைபெற்றதுடன், அவரது உடைகள் கிழிக்கப்பட்டதாகவும் பெண்கள் குற்றஞ்சாட்டினா். இதனிடையே, சம்பவ இடத்திலிருந்து வெளியேற முயன்றபோது, பெண்களில் ஒருவரை மூங்கில் குச்சியால் தாக்கியதாகவும், சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தற்போது, இரு பெண்களும் மருத்துவ பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுதொடா்பாக கல்காஜி காவல் நிலையத்தில் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அங்கு இருந்த சாட்சிகள் மற்றும் வழிப்போக்கா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவத்தில் தொடா்புடைய 4 முக்கிய நபா்களை அடையாளம் காணப்பட்டுள்ளனா். குற்றவாளிகளை கைது செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுடன் தொடா்புடைய இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.