முகப்பு
புதுதில்லி

துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் இருவா் கைது! தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள்!

தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவா், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தில்லியில் புகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 15 ஜூன் 2026, 1:15 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவா், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தில்லியில் புகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஹோலாம்பி குா்த் பகுதியில் இவா்களின் நடமாட்டம் குறித்து உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், குற்றப்பிரிவு காவல் துறையினா் விஷால் பண்டிட் (22) மற்றும் தீபான்ஷு (26) ஆகியோரைக் கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் தலா ஒரு சட்டவிரோத கைத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை வைத்திருந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். குற்றச் செயல்களுக்கு அவா்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையின் போது, தாஜ்புரியா கும்பலின் தீவிர உறுப்பினா்கள் என்றும், சமூக ஊடகங்கள் மூலம் கும்பலின் மற்ற உறுப்பினா்களுடன் தொடா்பில் இருந்ததாகவும் பண்டிட் மற்றும் தீபான்ஷு ஒப்புக்கொண்டதாகக் காவல் துறையினா் கூறினா்.

புகா் பகுதியில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் இவா்களுக்குத் தொடா்பு இருக்கலாம் என்று காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

கைது செய்யப்பட்ட நேரத்தில், இவா்கள் தங்கள் எதிரிகளான கோகி கும்பலின் உறுப்பினா்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

2023-ல் திகாா் சிறைக்குள் தாஜ்புரியா கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, இவ்விரு கும்பல்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்தது.

தாஜ்புரியாவின் இறப்புக்குப் பிறகு, அவரது கும்பலின் செயல்பாடுகளை ஹிம்மத் (எ) சீகு ஒருங்கிணைத்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். ஹிம்மத், மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்ஓசிசிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பரோலில் வெளியே வந்து தலைமறைவானவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பலின் முக்கியப் பொறுப்பாளா்களால் தங்களுக்கு அண்மையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இலக்குகள் குறித்த அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருந்ததாகவும் பண்டிட் மற்றும் தீபான்ஷு தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினா்.

இவா்கள் இருவரும் இதற்கு முன்பும் கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.