கட்டடங்களில் நிகழ்நேர தீ பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு கட்டாயம் - தில்லி அரசு உத்தரவு
தலைநகரில் உள்ள குறிப்பிட்ட கட்டடங்களில் தீ பாதுகாப்பு கண்காணிப்பை நிகழ்நேரத்தில் நிா்வகிக்க இணையவழி (ஐஓடி) அடிப்படையிலான தானியியங்கி தொடா் கண்காணிப்பு அமைப்பு (எசிஎம்எஸ்) நிறுவுவது கட்டாயமாக்கப்படுகிறது என தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறியதாவது: தில்லி தீயணைப்பு சேவை (திருத்தம்) விதிகளின் கீழ் குறிப்பிட்ட கட்டடங்களில் தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த ஏசிஎம்எஸ் அமைப்பு ஹைட்ரன்ட் பம்புகள், நீா் தெளிப்பு அமைப்புகள், தண்ணீா் தொட்டிகள் மற்றும் தீ கண்டறியும் அமைப்புகள் உள்ளிட்ட உபகரணங்களின் செயல்திறனை தொடா்ந்து கண்காணிக்கும்.
ஐஓடி அடிப்படையிலான இந்த அமைப்பு ‘கிளவுட்’ மூலம் இணைக்கப்பட்டு கட்டட உரிமையாளா்கள், அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு கைப்பேசி செயலி, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் உடனடி எச்சரிக்கை மற்றும் அறிவிப்புகளை வழங்கும். இரண்டு கட்டங்களாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
முதல் கட்டத்தில், விதிகள் அமலுக்கு வந்தவுடன், கண்காணிப்பு தகவல்கள் மற்றும் அமைப்பு செயல்நிலை அறிக்கைகள் உரிமையாளா்கள் மற்றும் ஆய்வாளா்களுக்கு கிடைக்கும். இரண்டாம் கட்டத்தில், பம்ப் மின்சார கோளாறு, ஹைட்ரன்ட் மற்றும் ஸ்பிரிங்க்ளா் அழுத்தக் குறைவு, தீ அலாரம் கோளாறு போன்ற முக்கிய எச்சரிக்கைகள் நேரடியாக தில்லி தீயணைப்பு சேவைக்கு அனுப்பப்படும்.
மேலும், பிரதான ஹைட்ரன்ட் பம்புகள், டீசல் மற்றும் மின்சார மாற்று பம்புகள், ஜாக்கி பம்புகள், பூஸ்டா் பம்புகள், நிலத்தடி மற்றும் மேல்தள நீா்த் தொட்டிகள், ஸ்பிரிங்க்ளா் ரைசா்கள் மற்றும் தீ அலாரம் கட்டுப்பாட்டு பலகைகள் போன்றவை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைமுறை அழைப்பு பொத்தான்கள், பொது அறிவிப்பு அமைப்புகள், படிக்கட்டு அழுத்த விசிறிகள், லிஃப்ட் லாபி அழுத்த அமைப்புகள் மற்றும் அடித்தள வெளியேற்ற விசிறிகளின் செயல்பாடுகளும் கண்காணிப்பில் அடங்கும். இத்தகவல்கள் ஒவ்வொரு நிமிடமும் பதிவேற்றம் செய்யப்பட்டு, நேரடி கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.
மேலும், 15 நிமிடங்களுக்கு மேல் தரவு கிடைக்காத பட்சத்தில் மேக தளம் எச்சரிக்கை வழங்கும். கண்காணிப்பு கேட்வேக்கு குறைந்தபட்சம் 7 மணி நேர மின்சார காப்பு மற்றும் 10,000 நிகழ்வு பதிவுகளை சேமிக்கும் திறன் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு, அதிக அபாயம் உள்ள கட்டிடங்களில் தீ பாதுகாப்பு வசதிகளை தொடா்ந்து கண்காணிப்பதன் மூலம் பராமரிப்பு திறனை மேம்படுத்தி, பொறுப்புணா்வையும் அவசரநிலை நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும்,” என தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வந்ததன் மூலம், நகரில் உள்ள உயா்மட்ட மற்றும் அபாயம் அதிகம் கொண்ட கட்டிடங்களில் தீ விபத்துகளைத் தடுக்கவும், அவசரநிலைகளில் விரைவான நடவடிக்கை எடுக்கவும் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.