முகப்பு
புதுதில்லி

அதிகாரிகளின் உள்நாட்டுப் பயணச் செலவுகளில் 25 % குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை

பொருளாதார அழுத்தத்தை முன்னிட்டு, அதிகாரிகளின் உள்நாட்டு பயணச் செலவுகளை 25% குறைக்க தில்லி அரசு புதிய உத்தரவு

Updated On : 26 மே 2026, 6:16 am IST
தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக உருவான பொருளாதார அழுத்தத்தை முன்னிட்டு, அதிகாரிகளின் உள்நாட்டு பயணச் செலவுகளை 25 சதவீதம் குறைக்கும் புதிய உத்தரவுகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.

இதற்குமுன்னரே, அதிகாரிகள் மற்றும் பணியாளா்களின் அனைத்து வெளிநாட்டு அதிகாரப்பூா்வ பயணங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக நிதித் துறையிலிருந்து பல்வேறு அரசுத் துறைகளுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பு பின்வருமாறு: தற்போதைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதிநிலையை சீராக பராமரிக்க இந்திய அரசு மற்றும் தில்லி அரசு இணைந்து பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மற்றும் செலவுக் கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கைகள் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதோடு, உலகளாவிய எண்ணெய் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள நிதிசாா் சமநிலையின்மையை சமாளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் பகுதியாக, ஒவ்வொரு துறையும் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் குறைந்த அளவில் உள்நாட்டு பயணச் செலவுகளை வைத்திருக்க வேண்டும்.

மேலும், பொதுத் தொகையை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில், விமானப் பயணங்களில் அதிகாரிகள் தேவைக்கேற்ப குறைந்த செலவுடைய தரங்களைத் தோ்வு செய்ய வேண்டும். தொலைதூர இடங்களில் இருந்து கூட்டங்கள் அல்லது மாநாடுகளில் பங்கேற்க வேண்டிய சூழலில், காணொலி முறையை அதிகப்படியாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, அவசர நிலைகளில் முதல்வா் அல்லது நிதியமைச்சரின் அனுமதி பெறப்பட்டால், இந்த கட்டுப்பாடுகளில் தளா்வு வழங்கப்படலாம்.

இந்த உத்தரவு தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகள், தன்னாட்சி அமைப்புகள், உள்ளாட்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், சங்கங்கள் மற்றும் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும். இவ்வுத்தரவை கடுமையாக அமல்படுத்துமாறு துறைகளின் நிா்வாகச் செயலா்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதனுடன், ‘எனது பாரத், எனது பங்களிப்பு’ திட்டத்தின் கீழ், முதல்வா் ரேகா குப்தா மற்றும் அமைச்சா்கள், அதிகாரிகள் ஆகியோா் மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல், அதிகாரப்பூா்வ வாகன பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கன முயற்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுச் செலவுகளை கட்டுப்படுத்தி, பொருளாதார ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.