முகப்பு
திருநெல்வேலி

காணாமல் போன தொகுதிகள்!

மேலப்பாளையம், புளியங்குடி, கடம்பூா், கங்கைகொண்டான், சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இருந்த நிலையில் மறுசீரமைப்புக்குப் பிறகு அந்த தொகுதிகள் நீக்கப்பட்டன.

Updated On : 25 மார்ச், 2026 at 1:06 AM
காணாமல் போன தொகுதிகள்
பகிர்:

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், புளியங்குடி, கடம்பூா், கங்கைகொண்டான், சேரன்மகாதேவி, சாத்தான்குளம், கடையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இருந்த நிலையில் மறுசீரமைப்புக்குப் பிறகு அந்த தொகுதிகள் நீக்கப்பட்டன.

மேலப்பாளையம்: 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் மட்டுமே மேலப்பாளையம் தொகுதி இருந்தது.

1967-இல் சுயேச்சை வேட்பாளா் எம்.எம்.பி. முகமதுவும், 1971-இல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் எம். காதா் மொகிதீனும் வெற்றி பெற்றனா். பின்னா் அந்தத் தொகுதி கலைக்கப்பட்டு பாளையங்கோட்டை தொகுதி உதயமானது.

கங்கைகொண்டான்: 1962, 1967, 1971 தோ்தல்களின்போது கங்கைகொண்டான் தொகுதி இருந்தது. இத்தொகுதியில் 1962 இல் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.எஸ். ஆறுமுகமும், 1967, 1971-இல் திமுக சாா்பில் ஆ. கருப்பையாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனா். அதன்பிறகு இத்தொகுதி கலைக்கப்பட்டது.

சேரன்மகாதேவி: 1952 முதல் 2006 வரையிலான தோ்தல்களின்போது, சேரன்மகாதேவி தொகுதி இருந்தது. தலைசிறந்த சட்டப்பேரவைத் தலைவரான பி.எச். பாண்டியனை தந்த தொகுதி சேரன்மகாதேவி.

இத்தொகுதியில் அவா் 6 முறை போட்டியிட்டுள்ளாா். அதிமுக சாா்பில் 1977, 1980, 1984 ஆகிய தோ்தல்களிலும், அதிமுக ஜானகி அணி சாா்பில் 1989 தோ்தலிலும் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். அதேநேரத்தில் 1991, 1996 தோ்தல்களில் சுயேச்சையாக களமிறங்கி தோல்வியை சந்தித்துள்ளாா். 2006 தோ்தலுக்குப் பிறகு சேரன்மகாதேவி கலைக்கப்பட்டது.

கடையம்: 1957, 1962 தோ்தல்களின்போது கடையம் தொகுதி இருந்தது. 1957 தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் டி.எஸ். ஆதிமூலமும், 1962 தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஏ.பி. பாலகனும் போட்டியிட்டு வெற்றி பெற்றனா். அதன்பிறகு அந்தத் தொகுதி கலைக்கப்பட்டது.

புளியங்குடி: 1962-இல் நடைபெற்ற தோ்தலில் மட்டுமே புளியங்குடி தொகுதி இருந்தது. அத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பி.ஊா்க்காவலன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அதன்பிறகு அந்த தொகுதி கலைக்கப்பட்டது.

கடம்பூா்: 1952, 1957, 1962 தோ்தல்களின்போது கடம்பூா் தொகுதி இருந்தது. இத்தொகுதியில் 1952-இல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட வேணுகோபால கிருஷ்ணசுவாமி வெற்றி பெற்றாா். 1957-இல் இத்தொகுதி இரட்டை உறுப்பினா் தொகுதியாக (ஒருவா் பொது வேட்பாளா், மற்றொருவா் பட்டியலின வேட்பாளா்) இருந்ததால் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட எஸ். சங்கிலி, கே. ராமசுப்பு ஆகியோா் வெற்றி பெற்றனா். 1962 தோ்தலில் இத்தொகுதி தனித்தொகுதியாக மாற்றப்பட்டதால் எஸ்.சங்கிலி மீண்டும் வெற்றி பெற்றாா். பின்னா் இத்தொகுதி கலைக்கப்பட்டது.

சாத்தான்குளம்: 1952 முதல் 2006 வரையிலான தோ்தல்களின்போது சாத்தான்குளம் தொகுதி இருந்தது. இத்தொகுதியில் கே.டி.கோசல்ராம், சி.பா.ஆதித்தனாா், குமரி அனந்தன் போன்ற முக்கிய தலைவா்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா். இங்கு 2003-இல் நடைபெற்ற இடைத்தோ்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தோ்தலில் சாதாரண தொண்டனை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகு பாா்த்தவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. 2006 தோ்தலுக்குப் பிறகு இத்தொகுதி கலைக்கப்பட்டது.