கன்னியாகுமரி

காணாமல்போன 1,969 மீனவர்கள் விவரம் கிடைத்துள்ளது: கூடுதல் தலைமைச் செயலர் தகவல்

DIN

ஒக்கி புயலில் காணாமல்போன 1,969  மீனவர்களின் பெயர்ப் பட்டியல் கிடைத்துள்ளது என, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
ஒக்கி புயலுக்குப் பிறகு கடலில் மீன்பிடிக்க 282 படகுகளில் சென்ற கன்னியாகுமரி, பிற மாவட்டங்களைச் சேர்ந்த 2, 641 மீனவர்களைக் காணவில்லை.
 இவர்கள் மற்ற மாநிலங்களின் கரைகளில் மீட்கப்பட்டுள்ளனர். இதில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 1,969 பேர், படகுகளின் எண்ணிக்கை 249.
இவர்களில் மகாராஷ்டிரம், லட்சத்தீவு, கர்நாடகம், குஜராத், கேரள மாநிலங்களில் 15 இடங்களில், 2,230  பேர் கரைசேர்ந்துள்ளன். இதில்  மற்ற மாவட்ட மீனவர்களும் உள்ளனர். 
அனைத்து மாநிலங்களிலும் மீட்கப்பட்ட 1,969 மீனவர்களின் பெயர்ப் பட்டியல் கிடைத்துள்ளது. ஆனால், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. 
ஒக்கி புயலால்,  குமரி மாவட்டம்  ராமன்துறையைச் சேர்ந்த ஜெர்மியாஸ் (50), இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த சூசை (58) ஆகிய 2 மீனவர்கள் இறந்துள்ளனர். ஆனால்,  13 பேர் இறந்ததாக மீனவர்கள்  தரப்பில் கூறப்படுகிறது.
வருவாய், காவல்,  மீன்வளத் துறைகளுடன் இணைந்து குழு அமைத்து கிராமந்தோறும் சென்று பட்டியல் தயாரித்துள்ளோம். ஒருங்கிணைக்கப்பட்ட அப்பட்டியல் அடிப்படையில் நீரோடி, வள்ளவிளை, சின்னத்துறை, பூத்துறை, மார்த்தாண்டன்துறை உள்ளிட்ட 8 கிராமங்களில் 75 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 855 பேரைக் காணவில்லை எனத் தெரியவந்தது. அதில் 130 பேரும், 11 படகுகளும் பிற மாநிலங்களில் பத்திரமாக உள்ளனர். காணாமல்போனோரில் 156 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. மீட்கப்பட்டோரின் பெயர்களையும், கிராமங்களில் கணக்கெடுக்கப்பட்ட பெயர்களையும் ஒப்பிட்டுப்பார்த்து வருகிறோம். இன்னும் 725 பேரின் விவரம் தெரியவேண்டியுள்ளது.
தமிழக அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு 3ஆம் தேதியே சென்றுவிட்டனர். ஒக்கி புயல் குஜராத் மாநிலம் நோக்கி நகர்ந்தாலும் அதன் தாக்கம் டிச. 8வரை இருக்கும் என்பதால் விசைப்படகில் மீனுடன் உள்ள மீனவர்களை அம்மாநில அரசுகள் அனுப்பாமல் பாதுகாப்பாக வைத்துள்ளன. 8  ஆம் தேதிக்கு பிறகு மீனவர்களையும், படகுகளையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருவாரியான படகுகள் கேரளத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்து வருவதால் அவற்றைக் கணக்கெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது  என்றார் அவர். 
கூடுதல் கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திரகுமார், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் ஜோதிநிர்மலாசாமி, மீன்வளத் துறை இயக்குநர் தண்டபாணி, கூடுதல் இயக்குநர் சமீரன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT