கன்னியாகுமரி

கடையாலுமூடு தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

DIN

குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதி ரப்பர் தோட்டங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளதையடுத்து கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியான சீரோ பாயின்ட் பகுதியில் அண்மையில் ஒரு  பெண் புலி இறந்து கிடந்தது. இதைத் தொடர்ந்து சீரோபாயின்ட்,கடையாலுமூடு, சக்கரபாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் புலிகள் நடமாடுவதாகவும், அதைப் பார்த்தாகவும் தொழிலாளர்கள் கூறினர்.
இதையடுத்து அதிகாலையில் ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பை தொழிலாளர்கள் நிறுத்தினர். நன்றாக விடிந்த பிறகே பால்வடிப்புக்குச் சென்று வந்தனர்.
மேலும் புலிகள் நடமாடுவது தொடர்பாக ரப்பர் தோட்ட நிர்வாகங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மஞ்சள் பொற்றை மற்றும் பாம்பூரிப்பாறை ஆகிய இடங்களில் புலிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக் கேமராக்கள் இரண்டு நாள்களுக்கு முன்பு  அமைக்கப்பட்டன. இதற்கிடையே திங்கள்கிழமை காலையில் கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் சிறுத்தைகள் நடமாடுவது பதிவாகியிருந்தது தெரியவந்தது.
எனவே இப் பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தைகளைப் பிடிக்க வேண்டுமென வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது: சீரோபாயின்ட் சார்ந்த பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருவது கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ளது. பொதுவாக சிறுத்தைகள் வன எல்லைப் பகுதிகளில் வருவது வழக்கம்.
சில வேளைகளில் மக்களின் விளை நிலங்களிலும் வந்து விடும். அவற்றுக்கு வித்தியாசங்கள் தெரிவதில்லை. இவை மிளாக்கள், முயல்கள், காட்டுப் பன்றிகளை அடித்து உண்ணும். அதே வேளையில் பொதுமக்களின் வளர்ப்புப் பிராணிகளை தூக்கிச் செல்வதாக புகார்கள் இதுவரை வரவில்லை.
தற்போது பயிற்சி கூடுதல் வனப் பாதுகாவலர் கவுதம் தலைமையில் ஒரு குழுவை அப் பகுதிக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் சிறுத்தைகளின் தடயங்களை ஆய்வு செய்து கண்காணிப்பார்கள். தேவைப்பட்டால் கூண்டுகள் வைத்து சிறுத்தைகளைப் பிடித்து காட்டில் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT